மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 15 ஏப் 2018

ஹாலிவுட்டில் ராதிகா ஆப்தே

ஹாலிவுட்டில்  ராதிகா ஆப்தே

‘இரண்டாம் உலகப் போர்-2’ என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நடிகை ராதிகா ஆப்தே.

தமிழில் வெற்றிச்செல்வன், தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, கபாலி உட்பட சில படங்களில் நடித்திருப்பவர் இந்தி நடிகை ராதிகா ஆப்தே. இந்தி படங்களில் துணிச்சலான கதாபாத்திரங்களில் நடித்து வரும் ராதிகா ஆப்தே தற்போது ‘இரண்டாம் உலகப் போர்-2’ என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார். இதில் சாரா மேகன் தாமஸ், ஸ்டானா கேடிக் உள்பட பலர் நடிக்கின்றனர். இதில் ராதிகா, இரண்டாம் உலகப் போரின்போது ரகசிய உளவாளியாகச் செயல்பட்ட நூர் இனயத் கான் கேரக்டரில் நடிக்கிறார். ஏற்கெனவே இரண்டாம் உலகப் போர் பற்றி பல்வேறு படங்கள் வந்துள்ள நிலையில் அந்தப் படங்களில் இருந்து வித்தியாசமாக இது எடுக்கப்படவுள்ளது.

இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தின்போது, பிரிட்டனின் ரகசிய உளவாளியாகப் பணியாற்றிய நூர் இனயத் கான் பிரான்ஸை, ஜெர்மனி கைப்பற்றியிருந்தபோது பிரெஞ்சு எதிர்ப்பு ராணுவத்தினரின் உதவிக்காக அனுப்பப்பட்டவர். இவர் முதலாவது பெண் வானொலி இயக்குநராக அங்குப் பணியாற்றினார். ஹிட்லரின் ரகசியப் படையினரால் கைது செய்யப்பட்ட நூர், 1944-ல் சுட்டுக் கொல்லப்பட்டார். 30 வயதில் உயிரிழந்த இவரது கதாபாத்திரத்தில்தான் ராதிகா ஆப்தே நடிக்கிறார்.

ஹாலிவுட்டில் தீபிகா படுகோன் கடந்த 2014ஆம் ஆண்டு இயக்குநர் ஹோமி அடஜனியா இயக்கத்தில் நசீர் உதின்ஷாவுடன் இணைந்து ஃபைண்டிங் ஃபன்னி படத்தில் நடித்திருந்தார். அதேபோல் பிரியங்கா சோப்ரா ஏபிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகக் கூடிய குவாண்டிகோ தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இவர்கள் இருவருமே பாலிவுட் மட்டுமல்லாமல் ஹாலிவுட்டிலும் தங்களுக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை பெற்றுள்ளனர். அந்த வரிசையில் ஏற்கனவே ராதிகா ஆப்தே தி அஸ்ரம் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். ஆனால் அந்தப் படம் இன்னும் வெளிவராத நிலையில் ராதிகா மீண்டும் ஹாலிவுட்டில் நடிக்க இருப்பது எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது.

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon