மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 15 ஏப் 2018

எடப்பாடி லீக்ஸ்! - மினி தொடர் 10

எடப்பாடி லீக்ஸ்! - மினி தொடர் 10

கர்நாடக முடிவுக்குக் காத்திருக்கும் எடப்பாடி

ஆரா

தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிறது. தமிழகத்தில் 18 தொகுதிகள் எம்.எல்.ஏ இல்லாமல் இருக்கின்றன. இந்த ஜனநாயக முடக்கத்துக்கு எதிரான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறது. ஜனவரி 23ஆம் தேதி விசாரணை எல்லாம் முடிந்து தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட வழக்கில் இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை.

அதேநேரம், ஓ.பன்னீர் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களைத் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக கொறடா சக்கரபாணி தொடுத்த வழக்கின் தீர்ப்பும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

இந்த இரண்டு தீர்ப்புகளும் தமிழகத்தின் ஆட்சி சூழலில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பலரும் பலவிதமான கணக்குகளைப் போடுகிறார்கள்.

கடந்த வருடம் நவம்பர் 23ஆம் தேதி இரட்டை இலை சின்னம் வழக்கில் இந்தியத் தேர்தல் ஆணையம் தனது தீர்ப்பை வழங்கியது. இரட்டை இலையை மதுசூதனனை அவை தலைவராகக்கொண்ட பன்னீர் - எடப்பாடி அணியினருக்கே வழங்கியது தேர்தல் ஆணையம். 85 பக்கங்கள் கொண்ட அந்தத் தீர்ப்பில் முக்கியமான ஓர் உண்மையையும் ஒப்புதல் வாக்குமூலமாகவே வழங்கியிருக்கிறது தேர்தல் ஆணையம்.

அதாவது 111 எம்.எல்.ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் பன்னீர் - எடப்பாடி பக்கம் இருப்பதாகத் தேர்தல் ஆணையம் எழுத்துபூர்வமாகக் கூறியிருக்கிறது. ஆக, சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குப் பெரும்பான்மை இல்லை என்றும் அவருக்கு 111 உறுப்பினர்கள் ஆதரவே இருக்கிறது என்பதையும் இந்தியத் தேர்தல் ஆணையமே ஒப்புக் கொண்டிருக்கிறது. இது கடந்த நவம்பர் மாத நிலவரம். அண்மையில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. ரவி தன்னை தினகரன் அணியில் இணைத்துக் கொண்டிருக்கிறார். ஆக, இப்போது எடப்பாடி பழனிசாமி அரசுக்கு 110 எம்.எல்.ஏக்கள் ஆதரவு மட்டுமே இருக்கிறது.

ஜெயலலிதா சட்டமன்றத்தில் 110 விதியின்படியே நிறைய அறிக்கைகளை வாசித்து வந்தார். ஆனால், எடப்பாடி பழனிசாமியோ வெறும் 110 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்து ஆட்சியையே நடத்தி மன்னிக்கவும், நகர்த்தி வருகிறார்.

தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டால் 18 எம்.எல்.ஏக்களின் தகுதிநீக்கம் ரத்து செய்யப்படவே அதிக வாய்ப்பிருப்பதாக அரசியல் தாண்டிய சட்ட வல்லுநர்கள் சொல்லுகிறார்கள். அதேநேரம் பன்னீர் உட்பட 11 சட்டமன்ற உறுப்பினர்கள் கொறடா உத்தரவை மீறியதும் நீதிமன்றத்தில் உறுதியாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் மீண்டும் உள்ளே வந்து, இப்போது பன்னீர் உட்பட 11 பேர் வெளியே செல்லும் நிலை ஏற்பட்டால் எடப்பாடி அரசுக்கு மேலும் சிக்கலாகிவிடும்.

தீர்ப்பு தாமதமாகும் ஒவ்வொரு நாளும் எடப்பாடி அரசாங்கத்தின் ஆயுள் அதிகரித்துக்கொண்டிருப்பதாக கருதப்படும் நிலையில் அண்மையில் ஒருநாள் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணனுடன் முக்கியமான ஓர் ஆலோசனை நடத்தியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இரு வேறுபட்ட தகுதிநீக்க வழக்குகளின் தீர்ப்பும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டால், அதையடுத்து அரசின் நிலை என்ன என்பதுதான் இந்த ஆலோசனையின் முக்கியமான சாரம். அப்போது அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன், ‘தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு எப்போது வழங்கப்பட்டாலும் அதனால், தமிழக ஆட்சிக்கு எந்த ஆபத்தும் வராது. தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதிநீக்கம் செய்தது செல்லாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தால் நாம் உடனடியாக உச்ச நீதிமன்றம் செல்லலாம், அரசியல் சாசன பெஞ்ச்சுக்குச் செல்லலாம். சபாநாயகரின் பிரத்யேக அதிகாரத்தில் நீதிமன்றத்தின் தலையீடு பற்றி புதிய வழக்குத் தொடரலாம். இப்படி சட்ட ரீதியாகப் பல வாய்ப்புகள் இருப்பதால், ஆட்சிக்கு இந்த வழக்கால் - தீர்ப்பால் எந்த ஆபத்தும் வராது’ என்று முதல்வருக்கு முழு உத்தரவாதம் கொடுத்திருக்கிறாராம் அட்வகேட் ஜெனரல்.

இந்த உத்தரவாதத்தின் அடிப்படையில்தான் தன்னிடம் இப்போது இருக்கும் எம்.எல்.ஏக்களையும், தினகரன் தரப்பில் இருக்கும் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களையும், சில திமுக எம்.எல்.ஏக்களையும் கூட கனிவான கண்காணிப்பு எல்லைக்குள் வைத்திருக்கிறார் முதல்வர்.

இந்த நிலையில்தான் தனது ஆஸ்தான ஆலோசகர்களான அமைச்சர்கள் தங்கமணியிடமும் வேலுமணியிடமும் அண்மையில் மனம்விட்டுப் பேசியிருக்கிறார் எடப்பாடி. இவர்கள் இருவரும் பாஜகவுக்கும் பாஜக அரசுக்கும் நெருக்கமானவர்கள். முதல்வருக்கும் மத்திய அரசுக்குமான தகவல் பரிவர்த்தனைகள்கூட இந்த அமைச்சர்கள் மூலமாகத்தான் நடப்பதாகக் கோட்டை வட்டாரத்திலேயே சொல்கிறார்கள்.

அப்படிப்பட்ட இரு அமைச்சர்களையும் வைத்துக்கொண்டு முதல்வர் நடத்திய ஆலோசனை, ‘இன்னும் எத்தனை நாள்களுக்குதான் பிஜேபிக்குப் பயந்துகொண்டிருப்பது?’ என்பதுதான். ஆம்... இந்த ஆட்சியை எத்தனை நாளுக்கு நகர்த்துவது என்பதில் ஒருபக்கம் தீவிரமாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி அதேநேரம் இன்னொரு விஷயத்திலும் உஷாராக இருக்கிறார். அதாவது எப்படியோ இந்த ஆட்சி போய்விட்டால் அடுத்து என்ன செய்வது என்பதே அந்த உஷார்.

‘இப்ப நாம எல்லாம் பிஜேபிக்கு அடங்கி நடக்கிறதா எல்லாரும் சொல்லிக்கிட்டிருக்காங்க. இந்த ஆட்சி தொடரணும்குற நோக்கத்துலதான் நாம மத்திய அரசுக்கு அனுசரிச்சு போறோம். ஆனா இந்த ஆட்சி முடிஞ்சுதுனா அடுத்து நம்ம நிலைமை என்ன? பிஜேபியோட சேர்ந்தோம்னா நமக்கு எதுவும் கிடைக்காது. அப்படி இருக்கும்போது இப்பவே ஏன் நாம பிஜேபியை எதிர்த்து பேச ஆரம்பிக்கக் கூடாது? இனிமே அவங்களுக்கு பயப்பட்டு என்ன ஆகப் போகுது? நம்மளைதான் அடிமைன்னு எல்லாரும் பேசிக்கிட்டிருக்காங்க. எப்படியும் அடுத்த தேர்தலுக்கு பிஜேபி நமக்குப் பயன்படாதுங்குற நிலைமையில ஏன் இனியும் அதை நாம தூக்கி சுமக்கணும்?’

- இதுதான் அந்த ஆலோசனையில் விவாதிக்கப்பட்ட தகவல்.

இந்த ஆட்சி இன்னும் சொற்ப காலத்துக்கோ, அற்ப காலத்துக்கோ தொடர்வதற்கு பிஜேபி காரணமாக இருக்கலாம். ஆனால், அதிமுகவின் அடுத்த தலைவராக உருவெடுப்பதற்கு தனக்கோ, அடுத்த தேர்தலில் அதிமுகவுக்கோ பிஜேபியால் ஒரு பயனும் இருக்காது என்பதில் தெளிவாக இருக்கிறார் எடப்பாடி.

அதன் விளைவுதான்... ஏப்ரல் 12ஆம் தேதி தமிழகத்தில் கறுப்புக் கொடிகளுக்கு இடையே பிரதமர் மோடியைப் பத்திரமாக வரவேற்று, பவ்யமாக வழியனுப்பி வைத்த நிலையில்... அடுத்த நாள் ஏப்ரல் 13ஆம் தேதி தான் தொடங்கியிருக்கும் அதிகாரபூர்வ நாளேடான நமது அம்மாவில், ’நெருப்பாகும் வெறுப்பு’ என்ற தலைப்பில் வெளியான கவிதை.

அதில் ஒரு வரி வரும்... ‘தொடர்ந்து வஞ்சித்தே வருவீர் என்றால் எவருக்கு வராது ஏகக் கடுப்பு? எது கேட்டு நின்றாலும் இழுத்தடிப்பு’!

மோடிக்கு தமிழ் தெரியாது என்றாலும் மத்திய உளவுத்துறைக்குமா தமிழ் தெரியாது? இந்தக் கவிதை பற்றி தெளிவாகக் குறிப்பிட்டு, டெல்லிக்கு தகவல் சொல்லியிருக்கிறது. அதில் முக்கியமான நோட், கர்நாடக தேர்தல் முடிவுக்காக காத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்பதே!

(இன்னும் லீக் ஆகும்)

எடப்பாடி லீக்ஸ்-1

எடப்பாடி லீக்ஸ்-2

எடப்பாடி லீக்ஸ்-3

எடப்பாடி லீக்ஸ்-4

எடப்பாடி லீக்ஸ்-5

எடப்பாடி லீக்ஸ்-6

எடப்பாடி லீக்ஸ்-7

எடப்பாடி லீக்ஸ்-8

எடப்பாடி லீக்ஸ்-9

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon