மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 15 ஏப் 2018

நாங்கள் கேலி பொருளா? திருநங்கைகள் தினம்!

நாங்கள் கேலி பொருளா? திருநங்கைகள் தினம்!

2008ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி திருநங்கைகளுக்குத் தனி நலவாரியம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. திருநங்கைகளின் சமூகப் பாதுகாப்பைக் கருதி, அவர்களின் சிறப்பை வலியுறுத்தும் வகையில் திருநங்கைகளுக்கு நலவாரியம் அமைக்கப்பட்ட நாளை, திருநங்கையர் நாளாகக் கொண்டாட 2011ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

2014ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி உச்ச நீதிமன்றம் திருநங்கைகளுக்கு மூன்றாம் பாலினம் என்ற அங்கீகாரத்தை வழங்கியது. அதன்படி, ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 15ஆம் தேதி திருநங்கைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

திருநங்கை என்றாலே, பாலியல் தொழில் செய்பவர்கள்தான் என்ற தவறான புரிதல் உள்ளது. அதை எல்லாம் தகர்த்தெறியும் வகையில் இன்று திருநங்கைகள் பலர் சாதனைப் படைத்து வருகின்றனர். உடலளவில் ஆணாகப் பிறந்து ஹார்மோன்களின் குளறுபடியான செயல்பாட்டால் பெண்ணாக மாற்றம் அடைந்தவர்கள்தான் திருநங்கைகள். பெண்ணாகத் தன்னை உணர்ந்தாலும் இவர்களுக்குக் கருப்பை இருக்காதே தவிர மற்றபடி எந்தக் குறைபாடுகளும் இல்லாதவர்கள். திருநங்கை என்பவர்கள் ஆணாகவும் பெண்ணாகவும் இல்லாத காரணத்தால் அவர்கள் மூன்றாம் பாலினத்தவர்களாக கருதப்படுகின்றனர். ஆனால், அவர்களைச் சமூகம் ஏற்றுக்கொள்வதில்லை. திருநங்கை எனத் தெரிந்ததுமே அவர்களை வீட்டை விட்டுப் பெற்றோர் துரத்துகின்றனர்.

திருநங்கை என்றாலே அவர்கள் மீதான தவறான கண்ணோட்டத்தால் தங்குவதற்கு வீடு கிடைக்காமலும், திறமை இருந்தும் செய்வதற்கு வேலைக் கிடைக்காமலும் ஒதுக்கி வைக்கப்படுகின்றனர். அவர்கள் மத்தியில் உள்ள வறுமை நிலை முற்றிலும் மாறவில்லை. ஆனால், அவர்களின் தொடர் உரிமை போராட்டத்தின் வெற்றியாகத் திருநங்கைகளை மூன்றாம் பாலினம் எனப் பல இடங்களிலும், அரசு வேலைவாய்ப்பு விண்ணப்பங்களிலும் குறிப்பிடத் தொடங்கியுள்ளனர். அதேபோல், ரயில்வே துறை மற்றும் ஐஆர்சிடிசி நிறுவனம் திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்து, டிக்கெட் முன்பதிவு மற்றும் நீக்கம் படிவத்தில் அவர்களின் பாலினத்தைச் சேர்த்துள்ளது. கடந்த வாரம் பான் கார்டுக்கு திருநங்கைகள் விண்ணப்பிக்கும்போது, தங்கள் பாலினத்தை குறிக்கும் வகையில் தனிக்கட்டம் வழங்கப்பட்டது.

காவல் துறை அதிகாரி தேர்வுக்காக விண்ணப்பித்த முதல் திருநங்கை பிரித்திகா யாசினி. திருநங்கை என்ற காரணத்துக்காக இவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில், ரிட் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் எழுத்துத் தேர்வில் பிரித்திகாவை அனுமதிக்க உத்தரவிட்டது. அந்தத் தேர்வில் கலந்து பிரித்திகா தேர்ச்சி பெற்றார். அடுத்து நடந்த உடல்தகுதி தேர்வின்போது, ஓட்டப்பந்தயத்தில் ஒரு நொடி காலதாமதமாக வந்ததாகக் கூறி, பிரித்திகாவைத் தகுதிநீக்கம் செய்தது சீருடை பணியாளர் தேர்வாணையம். இதை எதிர்த்து மீண்டும் நீதிமன்றத்தில் பிரித்திகா மனு செய்தார். வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரை நேர்காணலில் அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வில் வெற்றி பெற்றும் தனக்குப் பணி வழங்கப்படவில்லை என பிரித்திகா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். விசாரணையில், தமிழகக் காவல் துறையில் பணியாற்றத் திருநங்கை பிரித்திகா யாசினி முழுத்தகுதி உடையவர். அவருக்கு எஸ்.ஐ. பணி வழங்க வேண்டும் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பிரித்திகா யாசினி, அகாய் பத்மாஷலி, கல்கி, கிரேஸ் பானு, நூரி, தாரிகா பானு உள்ளிட்டவர்களால், சமூக பார்வை ஓரளவு மாற்றம் அடைந்திருந்தாலும் முற்றிலும் மாறவில்லை. அவர்களும், இது போன்ற தடைகளையும் அவமானங்களையும் கடந்தே வந்துள்ளனர். இவர்களின் அதிகபட்சமான கோரிக்கை, எங்களைக் கேலி பொருளாகப் பார்க்காமல் சக மனிதராக நடத்துங்கள். எங்களுக்கு வாய்ப்பளித்தால் நாங்களும் சாதனை செய்வோம் என்பதே.

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon