மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 15 ஏப் 2018

ஹுண்டாய் - நிசான் - டாட்டா: சரிவு!

ஹுண்டாய் - நிசான் - டாட்டா: சரிவு!

இந்தியாவின் பயணிகள் வாகன ஏற்றுமதி கடந்த ஏழு ஆண்டுகளில் முதல் முறையாக 2017-18ஆம் ஆண்டில் சரிவடைந்துள்ளது. உள்நாட்டு சந்தையின் மீது கவனம் செலுத்தப்பட்டதாலும், ஜிஎஸ்டி ரீபண்ட் சிக்கலால் ஏற்பட்ட தாக்கத்தாலும் பயணிகள் வாகன ஏற்றுமதி 1.51 சதவிகிதம் சரிவடைந்துள்ளது.

இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தகவலின் படி, 2017-18ஆம் ஆண்டில் 7,47,287 யூனிட்டுகள் பயணிகள் வாகனம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் 2016-17ஆம் ஆண்டிலோ 7,58,727 யூனிட்டுகள் பயணிகள் வாகனம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் துணை பொது இயக்குநரான சுகத்தோ சென் பேசுகையில், “2010-11ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக பயணிகள் வாகன ஏற்றுமதி சரிவடைந்துள்ளது. 2010-11ஆம் ஆண்டில் பயணிகள் வாகன ஏற்றுமதி 0.41 சதவிகிதம் சரிவடைந்திருந்தது” என்று கூறினார்.

ஏற்றுமதி சரிவுக்கான காரணங்களை விளக்குகையில், பயணிகள் வாகன ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்கள் உள்நாட்டுச் சந்தைக்கு முக்கியத்துவம் அளித்து, இங்கேயே கவனம் செலுத்தி வருவதாக அவர் கூறினார். மேலும், ஜிஎஸ்டி ரீபண்ட் பிரச்னையால் வாகன உற்பத்தியாளர்கள் தவித்து வருவதாகவும், வாகன உற்பத்தி துறைக்கு மட்டும் சுமார் 1,000 கோடி ரூபாய் ஜிஎஸ்டி ரீபண்ட் தொகை நிலுவையில் உள்ளதாகவும் அவர் கூறினார்.

பயணிகள் வாகன ஏற்றுமதியில் முதலிடத்தில் இருக்கும் ஹுண்டாய் நிறுவனத்தின் ஏற்றுமதி 7.39 சதவிகித சரிவைச் சந்தித்துள்ளது. நிசான் நிறுவனத்தின் ஏற்றுமதி 38.03 சதவிகிதமும், ஹோண்டா நிறுவனத்தின் ஏற்றுமதி 3.21 சதவிகிதமும், டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஏற்றுமதி 40.94 சதவிகிதமும் சரிவடைந்துள்ளது.

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon