மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 15 ஏப் 2018

கண்ணி வெடி நிபுணர்: வீரப்பன் கூட்டாளி மரணம்!

கண்ணி வெடி நிபுணர்: வீரப்பன் கூட்டாளி மரணம்!

கர்நாடகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வீரப்பன் கூட்டாளியான சைமன் உடல்நிலை பாதிப்பு காரணமாக பெங்களூரு அரசு மருத்துவமனையில் இன்று மரணமடைந்தார்.

கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் ஒட்டர்தொட்டி என்ற ஊரைச்சேர்ந்தவர் சைமன். கண்ணி வெடி புதைத்து வெடிக்க செய்வதில் திறமைசாலியான சைமன், 1988ஆம் ஆண்டில் வீரப்பனின் கூட்டாளியாகச் சேர்ந்தார்.

கடந்த 1993ஆம் ஆண்டில் எஸ்.பி.கரேத்தே கோபாலகிருஷ்ணன் தலைமையில் வீரப்பனைப் பிடிக்க ஜங்கிள் என்ற டீம் அமைக்கப்பட்டு, 17 இன்ஃபார்மர் உதவியுடன், வனத் துறைக் காவலர்களும் தமிழ்நாடு போலீஸார்களும் வீரப்பன் பதுங்கியிருக்கும் காட்டுப்பகுதிக்குச் செல்வதற்குத் திட்டம் வகுக்கப்பட்டது.

இந்த ரகசியத் திட்டத்தை தெரிந்துகொண்ட வீரப்பன், சைமனுடன் சேர்ந்து ஒரு திட்டம் தீட்டினார். அதன்படி, கர்நாடக எல்லையில் உள்ள பாலாறு அருகில் சுரக்காய் மடுவுப்பகுதியில் போலீஸார் வரக்கூடிய வழியில் கண்ணி வெடிகளைப் புதைக்கப்பட்டு சில நாள்களாகக் காத்திருந்தார்கள் வீரப்பனும் அவரது கூட்டாளிகளும்.

1993 ஏப்ரல் 11ஆம் தேதி எஸ்.பி. கரேத்தே கோபாலகிருஷ்னன் தலைமையில் வேன், ஜீப்கள் வந்தபோது, வீரப்பனும் வீரப்பன் கூட்டாளியும் சேர்ந்து பேட்டரி இணைப்பு கொடுத்து கண்ணி வெடிகளை வெடிக்க வைத்தார்கள். இதில், 17 இன்ஃபார்மர், தமிழ்நாடு போலீஸார் ஐந்து பேர், வனத் துறை காவலர்கள் 2 பேர் என மொத்தம் 24 பேர் இறந்து போனார்கள், பின்னால் வந்த வாகனத்தில் இருந்த எஸ்.பி. கரேத்தே கோபாலகிருஷ்ணன் உட்பட ஐந்து பேர் உயிர் தப்பினார்கள்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த மாதேஷ்வரம் காவல் துறையினர் வீரப்பன் கூட்டாளிகள் பதுங்கியிருந்த இடத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியபோது தப்பிக்க முயன்ற சைமனுக்குக் கால் முறிவு ஏற்பட்டது.

இதற்கிடையே, சைமனைக் காப்பாற்றிய வீரப்பன் சின்னிபாளையம் அழைத்துசென்று நாட்டு வைத்தியரிடம் நாட்டுக் கோழிமுட்டை பச்சையிலை கட்டுப்போட்டு வந்தபோது, காவல் துறைக்குத் தகவல் கிடைத்துக் கடந்த 1993ஆம் ஆண்டு ஜூன் மாதம் சைமனை மடக்கிப் பிடித்தார்கள்.

பின்னர் வாழ்நாள் தண்டனை விதிக்கப்பட்டு மைசூர் சிறையில் சைமன் அடைக்கப்பட்டார். 25 ஆண்டுகளாக மைசூர் சிறையில் இருந்துவந்த சைமனுக்கு கடந்த ஆறு மாதங்களாக உடல்நிலை சரியில்லாததால் பெங்களூரு சிறைக்கு மாற்றப்பட்டார்.

அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் பெங்களூரு அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், இன்று (ஏப்ரல் 15) காலை 4.00 மணிக்கு சைமன் உயிரிழந்தார். அவரது உடல் இன்று மாலை ஒட்டர்தொட்டிக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறைந்த சைமனுக்குத் திருமணம் ஆகவில்லை. ஒரு தங்கையும் அண்ணன் மட்டுமே உள்ளனர்.

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon