மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 15 ஏப் 2018

திருப்பதியில் தலித் பூசாரிகள்?

திருப்பதியில் தலித் பூசாரிகள்?

திருமலை திருப்பதி தேவஸ்தானம், முதன்முறையாகத் தலித்துகளை பூசாரிகளாக நியமிக்கத் திட்டமிட்டுள்ளது. நீண்டகால மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களிலிருந்து அரிதான மாற்றத்தைத் திருப்பதி தேவஸ்தானம் ஏற்படுத்த முடிவு செய்துள்ளது.

தலித் மற்றும் பின்தங்கிய சமூக மக்களைப் பூசாரிகளாக நியமிப்பதற்கான பைலட் திட்டத்துக்காக 200 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தால் அளிக்கப்படும் மூன்று மாதப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இருப்பினும், இவர்கள் திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகார எல்லைக்குள் வழக்கமான கோயில்களில் நியமிக்கப்பட மாட்டார்கள். தலித் மக்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகள் அல்லது பின்தங்கிய சமூகத்துக்குச் சொந்தமான பகுதிகளில் விரைவில் கட்டப்படவுள்ள கோயில்களில்தான் பூசாரிகளாக நியமிக்கப்படுவார்கள்.

“தேவஸ்தானம் நிர்வகிக்கும் கோயில்களில் இடஒதுக்கீடு அடிப்படையில் எஸ்சி, எஸ்டி மக்கள் பூசாரிகளாக நியமிக்கப்பட வேண்டும் எனத் தலித்துகள் பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்துவருகின்றனர். இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு எதிர்ப்புகள் இருந்தன. தற்போது, கோரிக்கையை நிறைவேற்றும் நிலைக்கு வந்துள்ளோம்” என தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில் சிங்கால் தெரிவித்துள்ளார்.

“இந்தத் திட்டம் 2016ஆம் ஆண்டு தேவஸ்தானத்தின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஊழியர் பயிற்சி அகாடமி (SVETA) மூலம் தொடங்கப்பட்டது. ஆனால் பின்னர் அது நிறுத்தப்பட்டது. மாநில எண்டோமென்ட் துறையுடன் இணைந்து செயல்பட்டு, 500 கோயில்கள் கட்டப்படவுள்ளன. இந்த நடவடிக்கை உண்மையில் ஊக்கமளிக்கிறது. ஏனென்றால் நீண்ட காலமாக, கோயில் நிர்வாகத்தையும், புனிதமான கடமைகளையும் பிராமணச் சமூகத்தினர் மட்டுமே செய்துகொண்டிருந்தனர். தற்போது, அதில் தலித்துகளும் இணையவுள்ளனர். ஒரு கோயில் அறக்கட்டளை இது போன்ற முற்போக்கான நடவடிக்கையை எடுத்தது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்” எனத் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

முன்னர் கேரளாவில் திருவாங்கூர் தேவசம் போர்டின் கீழ் இருக்கும் கோயில்களில் தலித்துகளைப் பூசாரிகளாக நியமித்ததன் மூலம் பழைமைவாத சாதி அடிப்படையிலான முறை தகர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon