மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 15 ஏப் 2018

கிராமத்தினருக்கு அக்‌ஷய் குமார் செய்த உதவி!

கிராமத்தினருக்கு  அக்‌ஷய் குமார் செய்த உதவி!

மகாராஷ்டிராவில் சடாரா பகுதி கிராம மக்களுக்கு மழைநீரைச் சேகரிக்க குளம் வெட்டுவதற்காக ரூபாய் 25 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார்.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான அக்‌ஷய் குமார் தன்னுடைய படங்களின் மூலம் சமூகக் கருத்துகளை மக்களிடம் கொண்டுசேர்க்க விரும்புகிறார். இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான ‘பேட் மேன்’ படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது இவர் ‘கேசரி’ என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மகாராஷ்டிராவில் சடாரா பகுதியில் இருக்கும் கிராமத்தில் நடந்துவருகிறது.

இந்த நிலையில் படப்பிடிப்பில் கலந்துகொண்ட அக்‌ஷய் குமார் அந்தப் பகுதியில் மழைநீரைச் சேகரிக்க குளம் வெட்டுவதற்காக நன்கொடை வழங்கியுள்ளார். அந்தக் கிராம மக்கள் தண்ணீருக்காக பல கிலோமீட்டர் தொலைவு நடந்துசெல்ல வேண்டியிருப்பதால் அவர்களுக்கு உதவி செய்யும்விதமாக 25 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியிருக்கிறார். மேலும், படப்பிடிப்பை சிறிதுநேரம் நிறுத்திவிட்டு கிராமத்து மக்களோடு இணைந்து மண்வெட்டியை எடுத்துக்கொண்டு விவசாயத்திலும் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்துக் கிராம மக்கள் மத்தியில் பேசிய அக்‌ஷய் குமார், “நாங்கள் சாப்பிடுவதற்கு நீங்கள் வியர்வைச் சிந்தி உழைத்துவருகிறீர்கள். அதனால் உங்கள் கண்களில் நீர் வருவதை என்னால் பார்க்க முடியவில்லை. குழாய்களில் நீர் வருவதைத்தான் பார்க்க விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அக்ஷய், முதல்வர் தேவேந்திர பட்னாவிஸிடமிருந்து சமூகச் செல்வாக்கு பெற்ற நபர் என்ற விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon