மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 15 ஏப் 2018

மீண்டும் திராவிட நாடு!

மீண்டும் திராவிட நாடு!

சிவ் விஸ்வநாதன்

இந்தியாவில் பதினாறு மற்றும் பதினேழாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த கிராமத்தினர் பற்றி வரலாற்று ஆசிரியர் தரம்பால் ஓர் அருமையான குறுங்கதை சொல்வார். ஓர் அரசனின் எதேச்சதிகாரப் போக்கினால் விரக்தியடைந்த கிராமத்து மக்கள், தங்கள் நாட்டைத் துறந்து புதிய இடத்துக்குப் பெயர்வார்கள். அவர்கள் மீண்டும் அந்த நாட்டுக்கே வர வேண்டுமென்றால், அந்த அரசன் நேரில் சென்று அந்த மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். ஆவணக் காப்பகங்களில் உள்ள தகவல்களில் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளதாகக் குறிப்பிடுவார் தரம்பால்.

அவரது ஆராய்ச்சியின் முடிவுகள், பிரிவினை என்பது நாட்டுப்புறவியலின் ஓர் அங்கமாக இருந்ததைக் காட்டுகிறது. தேசம் – மாநிலம் என்ற ஒழுங்கமைப்பின் மூலமாக, பிரிவினையை விரும்பும் மனநிலையை மாற்ற முடியாது என்பதை எவர் வேண்டுமானாலும் உணரலாம். தேசம் – மாநிலம் அமைய, மன்னராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை சர்தார் வல்லபபாய் படேல் எவ்வாறு எதிர்கொண்டார் என்பதை அறிந்திருப்போம். ஆரம்ப காலங்களில், காஷ்மீர் மற்றும் வடகிழக்கு பிராந்தியம் தவிர மற்ற பகுதிகளில் நிலவிவந்த தேசப் பிரிவினைவாதத்தைக் கூட்டாட்சி முறையானது கடுமையாக அடக்கியது.

ஆனால், இன்றைய காலகட்டத்தில் பாஜகவின் மையவாதமும் ஆர்எஸ்எஸ்ஸின் அசுரவிசையும் சேர்ந்து, ஒரு வகையான பிரிவினைவாதக் கொள்கையையே எதிர்தரப்பின் அடையாளங்களில் ஒன்றாக மாற்றியமைத்துள்ளது.

சமீபகாலத்தில் நடந்த இரு நிகழ்வுகள், இதையொட்டி முக்கியத்துவம் பெறுகின்றன. முதலாவது, பாஜகவின் தாக்குதலை எதிர்கொள்ள தென்னக மாநிலங்களின் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தார் ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு. தேர்தல் பார்வை அடிப்படையில் இதைத் தெரிவித்தபோதிலும், பாஜகவிடமிருந்து விடுபட்டு தென்னக மாநிலங்கள் பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக இணைந்து செயல்பட இது வழிவகுக்கும் என்று அவர் நம்புகிறார். இரண்டாவது, திராவிட நாட்டின் கொள்கைகளில் ஒன்றான மொழிப்பிரிவினை போராட்டம் குறித்த நினைவுகளை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் எழுப்பியது.

இந்த எண்ணம், பல ஆண்டுகளுக்கு முன்பாக பெரியாரின் நீதிக்கட்சி வெளிப்படுத்தியதாக இருக்கலாம். இது தமிழ் மொழியில் இருந்து பரவி, எல்லா திராவிட மொழிகளையும் தழுவியிருந்தது. 1950களில் திராவிட நாடு கொள்கை மெல்ல மங்கி, மொழி சார்ந்த விஷயங்கள் மட்டுமே பேசப்பட்டது. ஆனால், தற்போது தென்னக மற்றும் தமிழ்த் தேசியம் சார்ந்த எழுச்சியானது, தென்மாநிலங்கள் எப்போதுமே வேறுபட்டவைதான் என்கிற உணர்வைத் தருகின்றன. மொழி சார்ந்து ஒன்றிணையும்போது, ஒரு பொதுவான அதிருப்தி உருவெடுக்கிறது. ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்கள் ஒன்று திரண்டது, இதற்கான கண்கண்ட உதாரணம். இலங்கைப் பிரச்சினையில் மத்திய அரசு நடந்துகொண்டதற்கு, தமிழ் மக்கள் காட்டிய எதிர்வினை இது. 2017ஆம் ஆண்டு கால்நடைகள் விற்பனை செய்யப்படுவதற்கு தடை விதித்தது மத்திய அரசு. இந்த உத்தரவுக்கு இணங்க மறுத்து, கேரளா மக்கள் ட்விட்டரில் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுவே, இந்த ஆண்டு மத்திய அரசு பொருளாதார ரீதியாகத் தென்மாநிலங்களைப் புறக்கணிப்பதற்கு எதிராக ஒன்றிணைத்துள்ளது. ஸ்டாலினும் சந்திரபாபுவும் இந்த வேண்டுகோள்களில் ஒரு மாறுபாட்டைக் காண்பித்திருக்கிறார்கள். கடந்த செவ்வாய்க்கிழமையன்று கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரியைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் திருவனந்தபுரத்தில் ஒன்று கூடினர். 15ஆவது நிதிக்குழுவின் கொள்கைகள் தொடர்பாக விவாதித்தனர். ஆனால், இதில் தமிழகமும் தெலங்கானாவும் கலந்து கொள்ளவில்லை.

முன்பு போராடியதைப்போல, இப்போது யாரும் பிரிவினையை வேண்டவில்லை. மாநிலங்களை அரசியல் அமைப்பாகக் கருதும் நிலையில், சுயாட்சி பற்றிய குரல்கள் அதிகமாகியுள்ளன. தேர்தல் கட்டமைப்புக்குள் இருந்தவாறு, பாஜகவின் மையவாதத்தை சில கட்சிகள் எதிர்க்கின்றன. ஆனால், இந்தியா மற்றும் இந்தியராக இருப்பதில் இருந்து விலக எத்தனிக்கவில்லை. பிழைப்புக்காக அரசியல் நடத்துபவர்கள் வேறு வழியில்லாமல் புலம்புவதல்ல இது. களத்தில் இருக்கும் மக்களைப் புரிந்து, இதைக் கூர்மையாகச் செயல்படுத்தி வருகின்றனர் அரசியல்வாதிகள். நாட்டுப்பற்று இல்லாதது இந்தியாவுக்கு எதிரானது என்று இதுபற்றிக் குறைசொல்வதற்கு முன்பாக, பாஜக தனது செயல்பாட்டை மதிப்பிட வேண்டும். ஜனநாயகம் என்பது பேச்சுவார்த்தை அடிப்படையிலானது; இந்த நேரத்தில்தான் கூட்டாட்சி பற்றிய கேள்விகள் பெரிய விவாதத்துக்கு வழிவகுக்கின்றன.

அதே நேரத்தில், திராவிட நாடு என்பது தோல்வியுற்ற கொள்கை என்ற சலசலப்பும் இருந்து வருகிறது. இருப்பினும், திரும்பத் திரும்ப இது முன்னெடுக்கப்படுகிறது. கமல்ஹாசனும் ஸ்டாலினும் சமீபத்தில் இதனுள் வாசம் செய்திருக்கிறார்கள். இந்தக் கொள்கையின் மூலமாக, பல்வேறு எண்ணங்கள் மீது கவனம் விழுவதை நாம் உணர்ந்தாக வேண்டும். இதில் முதலாவதாக வருவது, ஒரு பிராந்தியம் மற்றும் அங்குள்ள கலாசாரத்தின் வித்தியாசமான தன்மை. இரண்டாவது, வடக்கின் அடக்குமுறை மற்றும் தெற்கைப் பற்றிய அதன் அறியாமை. மூன்றாவது, பொருளாதார முடிவுகளைப் பொறுத்த அளவில் தெற்குப் பகுதி புறக்கணிக்கப்படுவது. ஒவ்வொன்றிலும், இரண்டுவிதமான தந்திரங்களைப் பார்க்கலாம். சிறப்பு அந்தஸ்து மூலமாகச் சுயாட்சியை வேண்டும் மாநிலங்களைத் தேடிக் கண்டறிவது அல்லது அவற்றுக்கு இடையேயான ஒற்றுமையைப் பலப்படுத்துவது. முந்தைய நகர்வுகள் எல்லாம் பேச்சோடு இருக்க, புதிய செயல்திட்டமானது செயல்படும் வகையில் இருக்கும். மக்களின் மனநிலையில் எப்போதும் இருந்துவரும் தமிழ்த் தேசியம் அல்லது தெற்கு பிராந்தியவாதம் பேச்சுவார்த்தையின்போது பேரம் பேசப்படும் ஒன்றாக ஆகியுள்ளது.

இந்த எச்சரிக்கை குறிகளை இந்தியா அறிந்துகொள்ள வேண்டும். பெரும்பான்மைச் சக்திகளால் நடத்தப்படும் மையப்படுத்தப்பட்ட இந்தியாவானது தொடர்ந்து பலனளிக்காமல் போகும். பல வகையில் பன்மைத்தன்மை வாய்ந்த இந்தியா, இனி பன்மையாகவே பார்க்கப்படும். பாஜக தங்கள் வரைபலகைக்குத் திரும்பவும் சென்று, தேசம் – மாநிலம் குறித்த எண்ணத்தை மாற்றியாக வேண்டும்.

கட்டுரையாளர்: சிவ் விஸ்வநாதன், ஜிண்டால் குளோபல் சட்டக் கல்லூரிப் பேராசிரியர்

நன்றி: இந்துஸ்தான் டைம்ஸ்

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon