மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 15 ஏப் 2018

ராணுவக் காட்சியில் மக்கள் கடல்!

ராணுவக் காட்சியில் மக்கள் கடல்!

காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில் நடைபெற்ற ராணுவத் தளவாடக் காட்சியை நேற்று (ஏப்ரல் 14) மட்டும் 2.50 முதல் 3 லட்சம் மக்கள் வரை பார்வையிட்டுள்ளனர் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கிய ராணுவக் காட்சி நேற்றுடன் நிறைவு பெற்றது. ராணுவத்துக்குத் தேவையான பொருள்களைத் தயாரிக்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த ராணுவக் காட்சி நடைபெற்றது. இதில், இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் (டிஆர்டிஓ) உள்பட 50க்கும் மேற்பட்ட நாடுகளின் தளவாடத் தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்றன. சுமார் 700 அரங்குகள் அமைக்கப்பட்டன.

ஆதார் அட்டை வைத்து முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே காட்சியைப் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். சென்னையின் பல்வேறு இடங்களிலிருந்து ராணுவக் காட்சியைப் பார்வையிட பொதுமக்களுக்கு வசதியாக போக்குவரத்துக் கழகம் சிறப்புப் பேருந்துகளை இயக்கியது.

ஏப்ரல் 12ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ராணுவக் காட்சியைத் தொடங்கி வைத்தார். நம்நாட்டுக்கான அரங்கையும் அவர் திறந்துவைத்து பேசினார். முப்படையினரின் அணிவகுப்பும் மெய்சிலிர்க்கும் சாகச நிகழ்ச்சிகளும் திருவிடந்தையில் உள்ள கடற்கரையில் நடைபெற்றது. 13ஆம் தேதி இந்திய - ரஷிய நாட்டு ராணுவத் தொழில் துறை மாநாடு நடைபெற்றது. இதில் இரு நாடுகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான தொழில் துறை நிபுணர்கள் கலந்துகொண்டனர்.

காட்சி அரங்குகளில் பாதுகாப்பு நலன் கருதி சாதாரண வகை துப்பாக்கிகள், இயந்திர துப்பாக்கிகள், ராணுவ உடைகள், குண்டு துளைக்காத ஆடை, தொப்பிகள் போன்ற பொதுமக்கள் பார்க்க விரும்பிய பல்வேறு பொருள்கள் காட்சிப்படுத்தப்படவில்லை. எனினும் ராணுவக் காட்சி தங்களுக்குப் பயனுள்ளதாக இருந்ததாக அங்கு வந்தவர்கள் தெரிவித்தனர்.

கடைசி நாளான நேற்று ராணுவக் காட்சியில் மக்களைக் கவரும் வகையில் விமானப் படை, ராணுவத்தின் சாகசங்கள் நடைபெற்றன. இந்தியாவிலே தயாரிக்கப்பட்ட அதிநவீன அர்ஜுன் ரக பீரங்கிகளின் சாகசம் மற்றும் தனுஷ் உள்ளிட்ட ஏவுகணைகளை மக்கள் பார்த்து ரசித்தனர். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற சாகச நிகழ்ச்சியை ஏராளமான மக்கள் கண்டு வியந்தனர். நேற்று ஒருநாளில் மட்டும் மூன்று லட்சம் மக்கள் ராணுவக் காட்சியைப் பார்வையிட்டுள்ளனர். இதனால், ஈ.சி.ஆர்.சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது .

இதுபோன்று சென்னை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 5 போர் கப்பல்களை சனிக்கிழமை (ஏப்ரல் 14) மட்டும் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டனர். இதற்காக, சென்னை தீவுத்திடலில் இருந்து காலை 8 மணி முதல் 20 அரசு பேருந்துகள் மற்றும் 15 தனியார் பேருந்துகள் சென்னை துறைமுகத்துக்கு இயக்கப்பட்டன.

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon