மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 15 ஏப் 2018

விமர்சனம்: மெர்க்குரி - மௌனத்தின் அலறல்!

விமர்சனம்: மெர்க்குரி - மௌனத்தின் அலறல்!

இளம்பரிதி கல்யாண்குமார்

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் சினிமா பார்க்கும் ரசிகர்கள் அனைவருமே விமர்சகர்கள். படத்தின் இடைவேளையிலேயே முதல் பாதியின் விமர்சனம் தயாராகிவிடுகிறது. படம் வெளியான முதல் நாளிலேயே விரல் நுனியில் படத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயித்துவிடுகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் ஒரு படத்தை வெற்றியடையச் செய்ய, படத்தை முழுமையான படமாகப் படைக்க படைப்பாளிகள் மெனக்கெடுகிறார்கள். முழுமை என்பது கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்ற நான்கு முக்கிய தூண்களில் இருக்கிறது. இதில் ஏதேனும் ஒன்று அதன் தாக்கத்திலிருந்து விடுபடும்போது படம் எதிர்மறையான விமர்சனங்களில் சிக்கிச் சிதைந்துவிடுகிறது.

இப்படியொரு கடினமான சூழ்நிலையில் சோதனை முயற்சிகள் வருவது அரிதிலும் அரிது. மேலே சொன்ன நான்கு தூண்களில் வசனம் என்ற தூண் இல்லாமல் வெளியாகியிருக்கும் சமீபத்திய சோதனை முயற்சி இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் மெர்க்குரி. பேசும்படத்தின் முன்னோர்களான மௌனப்படத்தை கமல்ஹாசன் ‘பேசும்படம்’ (புஷ்பக விமானா) என்று பெயர்வைத்து கலர் காலத்தில் சோதனை செய்தார். அதே சோதனையை இன்று இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மெர்க்குரி என்று டிஜிட்டலைஸ் செய்திருக்கிறார்.

"Silence is the most powerful scream" - மௌனமே வலிமையான அலறல். படத்தின் taglineஆக வரும் இதுதான் படத்தின் மையம். மையம் என்று சொல்வதற்கான காரணம், இந்த மௌனத்தையும் அலறலையும் மையமாகக்கொண்டு கதை சொல்லலாம். மௌனம் மட்டுமே உணரும் ஐந்து பேருக்கும், ஓசையால் மட்டுமே பார்க்க முடிந்த ஒருவனுக்கும் இடையே நடக்கும் தவறான போர்தான் இந்தப் படத்தின் கதை.

படத்தின் மௌனத் தன்மையை வாய் பேச முடியாத, காது கேளாத கதாபாத்திரங்களால் படைத்திருக்கிறார் இயக்குநர். மௌன மொழியில் கொண்டாட்டமாகத் தொடங்கும் பயணம், அது சேரும் விபத்து, திகில் திருப்பம் எனப் படத்தின் இறுதியில் மௌனம் என்ன செய்கிறது என்றிருக்கிறது இந்தப் படத்தின் ஓட்டம்.

வசனங்கள் இல்லையென்றாலும் காடு, மலை, இரவு, பாழடைந்த தொழிற்சாலை எனக் கதை நிகழும் தளங்கள் அனைத்தும் பேசுபொருளாக இருக்கின்றன. இருள், சப்தம் என இரண்டே ஆயுதங்களோடு படம் முழுக்கத் தொய்வில்லாமல் அமரவைக்க முயற்சி செய்திருக்கிறது இந்த மெர்க்குரி. எனினும், மெர்க்குரி கசிவின் பின்புலத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கதைச்சூழல் சமீபத்திய அரசியல் நிகழ்வுகளை வைத்துப்பார்க்கும்பொழுது இன்னும் தீர்க்கமாக இருந்திருக்கலாமோ என்று தோன்றியது.

வசனங்கள் இல்லாமல் பார்வையாளர்களைக் கதைக்குள் கொண்டுவந்ததற்கு அசாத்திய நடிப்புத் திறன் வேண்டும். பிரபு தேவாவைத் தவிர முக்கியக் கதாப்பாத்திரங்களான மற்ற ஐவருமே அனுபவமில்லாதவர்கள். அவர்களிடமிருந்து உழைப்பைப் பெற்றதில் கார்த்திக் சுப்புராஜின் உழைப்பு தெரிகிறது. அந்த உழைப்பின் வெற்றியை வெற்றியாக எடுத்துக்கொள்ள சைகை மொழியை (sign language) கையாளும் விதத்தை இன்னும் கொஞ்சம் நேர்த்தியாகச் செய்திருக்கலாம் என்றே தோன்றியது. இருந்தாலும் சில காட்சிகள் நமக்கு நெருக்கமாக வந்துவிடுகின்றன. பிரபு தேவா சில இடங்களில் பார்வையிலே மிரட்டுகிறார். இந்துஜாவின் நடிப்பு நிச்சயம் பேசப்பட வேண்டிய ஒன்று.

படத்தின் வசனகர்த்தா இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்தான். இசை வேறு, ஓசை வேறு என்றிருக்கும் பரிணாமத்தில் ஓசையை இசையாக்கிக் கதையின் நகர்வுக்குப் பின்புலமாக இருக்கிறார். ஒளிப்பதிவாளர் திருவின் அனுபவம் வாய்ந்த ஒளிப்பதிவு படத்துக்கு மிகப் பெரிய பலம். சவுண்ட் டிசைன், கலை எனப் படத்தின் அனைத்துத் துறைகளில் பணிபுரிந்திருக்கும் கலைஞர்களும் முழு ஈடுபாட்டைக் கொடுத்திருக்கிறார்கள்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கு இரண்டு பாராட்டுகள். முதலாவது பாராட்டு மௌனப் படமாக இரண்டே மணி நேரத்தில் கச்சிதமாக மெர்குரியைத் தந்தமைக்கு. இரண்டாவது பாராட்டு தமிழகத்தில் வேலைநிறுத்தம் அமலில் இருந்தாலும் நல்ல படத்தை எப்பொழுது திரையிட்டாலும் ரசிப்பார்கள் என்று பைரஸி பயமில்லாமல் வெளியிட்டமைக்கு.

மற்ற படங்களைப் போல தேடித் தேடி விமர்சனம் செய்வதற்கும் அலசுவதற்கும் பல நுட்பங்கள் இருந்தாலும் தமிழ் சினிமாவின் போக்கை மாற்றும் இப்படிப்பட்ட படங்களை தராசின் பாசிட்டிவ் பக்கமே நிறுத்த வேண்டும். நிச்சயமாக இது கார்த்திக் சுப்புராஜின் அடையாளமாக இல்லையோ என்று தோன்றினாலும் இது நிச்சயம் பீட்சா தந்த கார்த்திக் சுப்புராஜின் படம்தான்.

மெர்க்குரி என்பது திரவ நிலையில் இருக்கும் ஓர் உலோகம். அது போல இந்த மெர்க்குரி திரைப்படமும் மௌன நிலையில் இருக்கும் ஆர்ப்பாட்டம்.

குறிப்பு: தற்போது தமிழ் சினிமா ஸ்டிரைக் நடைபெற்றுவருவதால் இப்படம் தமிழகத்தில் ரிலீஸாகவில்லை. ஸ்டிரைக் முடிவடைந்த பிறகு ரிலீஸ் செய்யப்படும் என்றும், அதுவரை பைரஸிக்கு முக்கியத்துவம் அளிக்காமல், தரமான இத்திரைப்படத்தை தியேட்டரில் பார்க்கும் வரை காத்திருக்குமாறு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கோரிக்கை வைத்திருக்கிறார்.

கட்டுரையாளர் குறிப்பு:

இளம்பரிதி கல்யாண்குமார், ஓமன் நாட்டிலுள்ள மஸ்கட் நகரத்தில் பணிபுரிந்துவருகிறார். இவர், கவிஞர் தாமரை குறித்து மின்னம்பலத்தில் எழுதிய கவித் தொடர் நல்ல வரவேற்பை பெற்றது. அத்துடன் சினிமா குறித்து கவித்துவமாகவும், அதன் உள்ளார்ந்த அழகியல்களை பட்டியலிடுவதில் சிறப்பு வாய்ந்தவர்.

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon