மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 15 ஏப் 2018

ஐபிஎல்: கடைசி பந்தின் சில முதல் நொடிகள்!

ஐபிஎல்: கடைசி பந்தின் சில முதல் நொடிகள்!

ஐபிஎல் போட்டியில் விதிமுறைகளை மாற்றக்கூடிய அதிகாரம் கிடைத்தால், கிரிக்கெட் ரசிகர்கள் முதலில் கொண்டுவரும் விதி ‘கடைசி பந்தை மேல் நோக்கி அடிக்கக்கூடாது’ என்பதாகத்தான் இருக்கும். ஏன் இப்படியொரு விதி என்பதை, மும்பை இந்தியன்ஸ் - டெல்லி டேர்டெவில்ஸ் இடையே நேற்று நடைபெற்ற போட்டியைக் கண்டவர்களுக்கு விளங்கியிருக்கும்.

ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை அணி களமிறங்கி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 194 ரன்களைக் குவித்தது. ரோஹித் அடிக்கவில்லையென்றாலும், சூர்யகுமார் யாதவ், எவின் லூயிஸ், இஷன் கிஷான் ஆகியோர் 150க்கும் மேலாக ஸ்டிரைக் ரேட் செல்லுமளவுக்கு டெல்லி பவுலர்களை துவம்சம் செய்தனர். மும்பையின் பவுலர்களும் கொஞ்சம் திறமையைக் காட்டியிருந்தால், மொத்த ஸ்கோர் 200க்கும் மேலாகச் சென்றிருக்கும். ஆனால், டிரெண்ட் பௌட், முகமது ஷமி ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் கடைசி ஐந்து ஓவர்களில் வழக்கமாக இருக்கவேண்டிய ரன் ரேட்டைக் குறைத்தனர். மும்பை அணி கடைசி 30 பந்துகளுக்கு 36 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது. எனவே, 195 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது டெல்லி அணி.

கிரிக்கெட்டைப் பொறுத்தவரை இலக்கு என்பது குறைந்தபட்ச எல்லை. அந்த இலக்கைத் தாண்டியும் செல்லலாம் அல்லது அதே எண்ணிக்கையையும் அடையலாம். ஆனால், டெல்லி அணியைப் பொறுத்தவரையில் மும்பை அணி கொடுத்த இலக்கை மட்டும்தான் அடைவோம் என்று கங்கனம் கட்டிக்கொண்டு ஆடியதாகவே தெரிகிறது.

மும்பையைவிட ஒரு மடங்கு அதிகமாகச் சென்று, டெல்லி அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஜேசான் ராய் ஆரம்பம் முதலே அதிரடிகாரராக ஆட்டத்தை நகர்த்தினார். டெல்லி அடிக்க வேண்டிய 195 ரன்களில் ஜேசான் மட்டுமே 91 ரன்கள் அடித்துவிட்டார். ரோஹித்தைப் போலவே, டெல்லி அணியின் கேப்டனான கம்பீரும் சரியாக விளையாடவில்லை. ஆனால், அவரைத் தொடர்ந்து வந்த ரிஷாப் பண்ட், மேக்ஸ்வெல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் சிறப்பாக விளையாடினார்கள். ஆனாலும், கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டபோது ஜேசான் பேட் பிடித்துக்கொண்டு நின்றிருந்தார். அதெல்லாம் சுலபமாக அடித்துவிடுவார் என்று சொல்லி முடிப்பதற்குள் ஒரு சிக்ஸ் மற்றும் ஃபோர் அடித்து ஆட்டத்தை சமநிலைக்குக் கொண்டுவந்தார். நான்கு பந்துகளுக்கு ஒரு ரன் என்றிருந்தபோது, ரசிகர்கள் அனைவரும் எழுந்து செல்ல ஆயத்தமாகிவிட்டனர். ஆனால் அடுத்த மூன்று பந்துகளையும் ரன் அடிக்காமல் தவறவிட்டு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்தார் ஜேசான். கடைசி பந்தில் ஒரு ரன் அடிக்கவில்லை என்றால் போட்டி சூப்பர் ஓவருக்கு மாறும் நிலையில், முஸ்தஃபிசுர் வீசிய பந்தை மேலே அடித்தார்.

தொலைக்காட்சியில் ஐபிஎல் போட்டியை தமிழில் வர்ணனை செய்பவர்கள் நேரில் பார்த்து பேசுகிறார்களா அல்லது தொலைக்காட்சியில் பார்த்தபடியே வர்ணிக்கிறார்களா என்று தெரியவில்லை. மேலே செல்லும் பந்தைப் பிடிக்க கீழே ஃபீல்டிங் வீரர் நிற்கிறாரா என்று தெரியாமல் ரசிகர்கள் பதைபதைப்பது போலவே, அவரும் பந்து மேலே போகிறது. அநேகமாக வரும் என நினைக்கிறேன் என்ற ரீதியில் பேசிக்கொண்டிருக்கிறார். ஜேசான் அடித்த பந்து ஒருவழியாக கவர் திசையில் நின்றிருந்த ஃபீல்டருக்கும் மேலாகச் சென்று மைதானத்தில் விழுந்தது. அதற்குள் இங்கு டெல்லி அணியினர் ஒரு ரன் ஒடியிருந்தார்கள். ஐபிஎல் 2018 சீசனிலும் தங்களது முதல் வெற்றியைப் பதிவு செய்தனர். டெல்லி அணியின் ரன் ரேட் 15 ஓவர்கள் வரை சிறப்பாக இருந்தாலும், கடைசி ஐந்து ஓவர்களில் 47 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. பும்ரா, முஸ்தஃபிசுர், குருனல் பாண்டியா இல்லையென்றால் எப்போதோ ஆட்டத்தை முடித்திருக்கும் டெல்லி.

மும்பை - டெல்லி அணிகள்தான் இப்படி விளையாடினார்கள் என்று பார்த்தால், ஹைதராபாத் - கொல்கத்தா அணிகள் ஒருபடி மேலே சென்றுவிட்டனர். கொல்கத்தா அடித்த 138 ரன்களை, ஹைதராபாத் அணி 19 ஓவர்களாக அடித்துக்கொண்டிருந்தது. இம்முறை ஐபிஎல் போட்டிகளில் மற்ற நாட்டு வீரர்கள் மற்றும் இளம் வீரர்கள் அளவுக்கு சர்வதேச இந்திய அணியில் இடம்பெற்ற வீரர்கள் விளையாடாதது மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon