மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 15 ஏப் 2018

4ஜி ஸ்மார்ட்போனுக்கு மாறினால் ஆஃபர்!

4ஜி ஸ்மார்ட்போனுக்கு மாறினால் ஆஃபர்!

ஏர்டெல் சேவையில் உள்ள வாடிக்கையாளர்கள் தங்களது 2ஜி அல்லது 3ஜி மொபைல் போன்களை 4ஜி போன்களாக அப்கிரேட் செய்தால் 30 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படும் என ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்புச் சேவை நிறுவனமான ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோவின் போட்டியைச் சமாளிக்கும் வகையில் பல்வேறு சலுகைகளைத் தங்களது வாடிக்கையாளர்களுக்குத் தொடர்ந்து அறிவித்து வருகிறது. அதன்படி ஏர்டெல் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள புதிய சலுகைத் திட்டத்தில் தினசரி 1 ஜிபி டேட்டா வீதம் 30 நாள்களுக்கு 30 ஜிபி இலவச டேட்டா வழங்கப்படுகிறது. 2ஜி/3ஜி போன்களுக்குப் பதிலாக 4ஜி போன்களை அப்கிரேடு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இச்சலுகை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் நிறுவனத் தலைமை மேலாண்மை அதிகாரியான வாணி வெங்கடேஷ் இத்திட்டம் குறித்து மனி கண்ட்ரோல் ஊடகத்திடம் பேசுகையில், “4ஜி டேட்டா பயன்பாடு அதிகரித்து வரும் சூழலில் 2ஜி/3ஜி போன்களை 4ஜி போன்களாகத் தரம் உயர்த்துவது எதிர்காலப் பயனளிப்பதாக இருக்கும்” என்று கூறியுள்ளார். முன்னதாக ஏர்டெல் நிறுவனம் ‘மேரா பெஹ்லா ஸ்மார்ட்போன்’ என்ற திட்டத்தில் சாம்சங், லாவா, இண்டெக்ஸ் உள்ளிட்ட மொபைல் தயாரிப்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்திருந்தது. அத்திட்டத்தின் ஓர் அங்கமாகவே தற்போது இந்த 4ஜி ஸ்மார்ட்போன் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon