மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 15 ஏப் 2018

பாஜகவுடன் சமரசமா? தினகரன் பதில்!

பாஜகவுடன் சமரசமா? தினகரன் பதில்!

‘மதவாத சக்திகளுடன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கூட்டணி அமைக்காது’ என்று அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி - பன்னீர் தரப்புக்கு அதிமுக ஒதுக்கப்பட்ட நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்துச் செயல்பட்டு வருகிறார் தினகரன். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி பல்வேறு கட்சிகளும் போராட்டம் நடத்தும் நிலையில், தினகரனும் காவிரி மாவட்டங்களில் ஆர்ப்பாட்டத்தை அறிவித்து நடத்தி வருகிறார்.

இந்தச் சூழ்நிலையில் சென்னை விமான நிலையத்தில் நேற்று (ஏப்ரல் 14) செய்தியாளர்களிடத்தில் பேசிய தினகரன், “அதிமுக அம்மா அணியாக இருந்து தற்போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமாகச் செயல்பட்டு வரும் நாங்கள் எப்போதும் மதவாத சக்திகளுடன் கூட்டணி வைக்க மாட்டோம்” என்று கூறினார்.

“காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி முதன்முதலாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதே நாங்கள்தான். காவிரிக்கரை மாவட்டங்களில் தொடர் போராட்டமும் நடத்தி வருகிறோம். எனவே மற்றவர்கள் அறிவிக்கும் நிகழ்வுகளில் கலந்துகொள்ள வேண்டும் என்கிற அவசியமில்லை” என்றும் தெரிவித்தார்.

மேலும், “பிரதமர் தமிழகம் வந்தபோது அவருக்கு எதிராகக் கறுப்புக் கொடி உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இத்தனை போராட்டங்கள் நடைபெற்று வரும்நிலையில், பிரதமர் மோடி இதுகுறித்து ஒரு வார்த்தைகூட பேசாமல் சென்றிருப்பது தமிழகம் என்னும் மாநிலம் இந்தியாவில் இருப்பதை மறந்துவிட்டாரோ என்ற எண்ணத்தையே நமக்கு ஏற்படுத்துகிறது” என்றும் தினகரன் தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 12ஆம் தேதி தமிழகம் வந்த பிரதமருக்கு எதிராக எதிர்க்கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் கறுப்புக் கொடி போராட்டங்கள் நடத்தின. ஆனால், தினகரன் இவற்றில் கலந்துகொள்ள மாட்டோம் என்று தெரிவித்துவிட்டார். இதனால் பாஜக எதிர்ப்பிலிருந்து தினகரன் பின்வாங்குகிறார் என்ற விமர்சனம் எழுந்த நிலையில், தற்போது மதவாத சக்திகளுடன் கூட்டணி கிடையாது என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon