மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 15 ஏப் 2018

ப்ளஸ் 1 மாணவர்களுக்குக் கோடை விடுமுறை பொருந்தாது!

ப்ளஸ் 1 மாணவர்களுக்குக் கோடை விடுமுறை பொருந்தாது!

ப்ளஸ் 1 வகுப்பிலிருந்து ப்ளஸ் 2 வகுப்புக்குச் செல்லும் மாணவர்களுக்குக் கோடை விடுமுறை பொருந்தாது என நேற்று (ஏப்ரல் 14) அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ப்ளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 6ஆம் தேதி நிறைவடைந்தன. ப்ளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 16ஆம் தேதி நிறைவடைகின்றன. பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 20ஆம் தேதி நிறைவடைகின்றன. ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 20ஆம் தேதிக்குள் தேர்வுகளை முடிக்கப் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது. ஏப்ரல் 21ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. ஜூன் 1ஆம் தேதி வெள்ளிக்கிழமை பள்ளிகள் திறக்கப்படுகின்றன. வழக்கமாகப் பள்ளி மாணவர்களுக்கு 31 நாள்கள் மட்டுமே விடுமுறை கிடைக்கும். இந்தாண்டு 41 நாள்கள் விடுமுறை கிடைத்துள்ளது.

இந்த நிலையில், கோடை விடுமுறை ப்ளஸ் 1 வகுப்பிலிருந்து ப்ளஸ் 2 செல்லும் மாணவர்களுக்குப் பொருந்தாது எனப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், “தமிழகம் முழுவதும் 3,000 பள்ளிகளில் தலா 2 லட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.463 கோடி செலவில் இணையதள வசதி செய்து தரப்படும். பள்ளிக் கல்வித் துறைக்கு மட்டும் ரூ.27 ஆயிரத்து 205 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. வருகிற 21ஆம் தேதி முதல் பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

ஆனால், ப்ளல் 2 செல்லும் மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்பு நடைபெற உள்ளதால் கோடை விடுமுறை அவர்களுக்குப் பொருந்தாது. மே 2ஆம் தேதி முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். மே, 1ஆம் தேதிக்குள் புதிய பாடத்திட்டம் தயாராகிவிடும். அரசு நிர்ணயித்ததை விடத் தனியார் பள்ளிகள் அதிகக் கட்டணம் வசூலித்தால் இதுபற்றி முன்னாள் நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட குழுவிடம் புகார் அளிக்கலாம். பள்ளிகள் திறந்ததும் அரசுப் பள்ளிகளில் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்குச் சீருடைகள் மற்றும் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

அரசுப் பள்ளிகளில், கோடை விடுமுறை அளிக்கப்படுவதைப் போல், தனியார் பள்ளிகளிலும் கோடை விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் கோடை விடுமுறையில், சிறப்புப் பயிற்சி வகுப்புகள் எதையும் நடத்தக் கூடாது என மார்ச் 31ஆம் தேதி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon