மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 15 ஏப் 2018

வேலைவாய்ப்பில்லா வளர்ச்சி மட்டும் போதுமா?

வேலைவாய்ப்பில்லா வளர்ச்சி மட்டும் போதுமா?

இந்தியாவின் பொருளாதாரம் வளர்ந்துவரும் நிலையிலும்கூட பணியிழப்புகள் மிகச் சாதாரணமாக நிகழ்வதாக ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது. பரவலாக ஆட்டோமேஷன் (தானியங்கி) மயமாகி வரும் ஐடி துறை ஊழியர்களே மற்ற துறைகளைவிட அதிக வலியை அனுபவித்து வருவதாக இந்த அறிக்கை கூறுகிறது.

நாட்டின் வளர்ச்சியானது வேலைவாய்ப்பை ஊக்குவிக்காத வளர்ச்சியாக இருப்பதாக பல்வேறு கருத்துகள் எழுந்துள்ள நிலையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 1,000 அதிகாரிகளிடம் நேர்காணல் நடத்திய பிறகு ‘ரைஸ் ஸ்மார்ட்’ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’பொருளாதாரம் வளர்ந்து வந்தாலும்கூட, ஊதியக் குறைப்பு, நிறுவன இணைப்பு அல்லது கையகப்படுத்துதலுக்குப் பிறகு இருக்கும் மிகையான ஊழியர்களைக் குறைத்தல், தொழில் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் மேற்கொள்ளப்படும் மறு கட்டமைப்பு போன்ற காரணங்களால் பணியிழப்புகள் மிகச் சாதாரணமாக நடைபெறுகின்றன’ என்று கூறப்பட்டுள்ளது.

மற்ற தொழில் துறைகளை விட ஐடி துறையைச் சேர்ந்த ஊழியர்களே அதிகமான பணியிழப்புகளுக்கு ஆளாவதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது. வேலையில்லா வளர்ச்சி குறித்து மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா கடந்த ஆண்டு மே மாதத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அவர் கூறியதாவது: “நடைமுறையில் இருக்கும் வளர்ச்சி வேலையில்லா வளர்ச்சியாகவே இருக்கிறது. இந்தியா உட்பட பல ஆசிய, ஐரோப்பிய நாடுகளும் இச்சிக்கலைச் சந்தித்து வருகின்றன. வளர்ச்சி இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதன் தாக்கம் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் இல்லை” என்று அவர் கூறியிருந்தார்.

ரைஸ் ஸ்மார்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியா உலகளவில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நாடாக உள்ளது. ஆனால், அண்மைக் காலமாக பணியமர்த்துதல் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. பெரு நிறுவனங்கள் மட்டுமல்லாமல் சிறு நிறுவனங்களிலும்கூட பணியிழப்புகளும், பணிநீக்கங்களும் மிகச் சாதாரணமாக நடைமுறையில் இருந்து வருகின்றன’ என்று கூறப்பட்டுள்ளது.

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon