மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 15 ஏப் 2018

சிறப்பு நேர்காணல்: தலித்துகளின் கௌரவத்தைக் காக்கும் சட்டம்

சிறப்பு நேர்காணல்: தலித்துகளின் கௌரவத்தைக் காக்கும் சட்டம்

சந்திப்பு: த. நீதிராஜன்

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை உருவாக்கிய பி.எஸ்.கிருஷ்ணனுடன் ஓர் உரையாடல் - பகுதி 7

இந்தச் சட்டத்தில் உள்ள குறைபாடுகள் நீக்கப்பட வேண்டும். இந்தச் சட்டத்தின் பயன் தலித் - பழங்குடி மக்களுக்குப் போய்ச்சேர விடாமல் இந்தக் குறைபாடுகள் தடுக்கின்றன. இந்தியர்களின் வாழ்வுரிமையை அரசியல் சாசனத்தின் சட்டக் கூறு 21 பாதுகாக்கிறது. ஆனால், தலித்துகளின் வாழ்வுரிமை இன்னமும் நடைமுறை யதார்த்தமாக மாறவில்லை. அதற்காக அரசியல் சாசனத்தின் சட்டக்கூறு 14, 15-களில் திருத்தம் செய்து புதிய உட்பிரிவை இணைக்க வேண்டும்.

மேலும் பல மாற்றங்கள் தேவைப்படுகின்றன. அவற்றை இப்படித் தொகுத்துக் கூறலாம்:

* வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 2இல் 3ஆவது உட்பிரிவைத் திருத்தம் செய்து அதில், சமூகப் புறக்கணிப்பு, பொருளாதாரப் புறக்கணிப்பு, சமுதாய மிரட்டல், பொருளாதார மிரட்டல் ஆகியவற்றைச் சேர்த்தல்.

* டாக்டர் அம்பேத்கர் சிலையை எந்த வடிவத்திலாவது அவமரியாதை செய்வதை, தலித் - பழங்குடி மக்கள் மீது கூட்டாக வன்கொடுமை புரிதல் என்று அங்கீகரித்தல்.

* கொலைக் குற்றத்துக்கு இந்தியத் தண்டனைச் சட்டம் 302இன் கீழ் மரணத் தண்டனை வழங்க வழி இருப்பதுபோல வன்கொடுமை தடுப்புச் சட்டத்திலும் கொலைக்கு மரண தண்டனை வழங்க வழி செய்தல்.

* அதேபோல ஒன்றுக்கும் மேற்பட்ட பல கொலைகளுக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட, பெரும் எண்ணிக்கையிலான தலித் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகளை நடத்துதல், கூட்டாகப் பாலியல் வன்கொடுமைகளை நடத்துதல் ஆகிய குற்றங்களைப் பிரிவு 10-ஐத் திருத்தம் செய்து சேர்ப்பது.

* தலித் - பழங்குடி மக்கள் மீது வன்கொடுமை புரியக் கூடிய ஒருவன், வன்கொடுமை நடக்கும்போது அந்த இடத்திலே இல்லை என்றாலும், அவன் தலித் - பழங்குடி மக்களின் வசிப்பிடங்களுக்கு வெளியே வசிப்பவனாக இருந்தாலும் அவனையும் குற்றத்தில் சேர்க்கக்கூடிய வகையில் சட்டப் பிரிவுகளை உருவாக்குதல்.

* வன்கொடுமைகள் மட்டுமே கையாளக்கூடியதாக மத்திய அரசிலும், மாநில அரசுகளின் மட்டத்திலும் சிறப்பு அதிரடிப் படைகளை அமைத்து, வன்கொடுமை சம்பவங்கள் வெடிக்கிறபோது அதை உடனே ஒடுக்குதல்.

இவையெல்லாம் பல்வேறு அரசாங்கங்களிடம், நேரடியாகவும், கடிதங்கள் மூலமாகவும் தரப்பட்டுள்ளன.

தலித்துகளின் கவுரவம் மீதான அடிப்படையான தாக்குதல்தான் தீண்டாமை. அரசியல் சாசனத்தின் சட்டக் கூறு 21இல் வரையறுக்கிற வாழ்வுரிமையில் கவுரவமாக வாழ்தல் என்பது பிரிக்க முடியாதது என்பதை சிவில் சமூகத்துக்கு உணர்த்துவதற்கான நிர்வாக ஏற்பாடுகளை உருவாக்க வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்தச் சட்டத்தின் கீழான வழக்குகளைச் சம்பவ இடத்திலேயே விசாரித்து நீதி வழங்கும் வகையில் நடமாடும் நீதிமன்றங்களை அமைக்க வேண்டும்.

வன்கொடுமைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதிலும், வழிகாட்டுவதிலும் ஏராளமான தலித் மனித உரிமை அமைப்புகள் தற்போது செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. அவர்களின் தனி அனுபவங்கள், இந்தச் சட்டத்தின் அமலாக்கத்தில் நிறைய குறிப்பான பிரச்சினைகளைக் கொண்டுவந்துள்ளன. அவர்களின் அனுபவங்களின் வழியாகவும் நான் பயனடைந்தேன்.

எழுபது தலித் மனித உரிமை அமைப்புகள் 2009இல் ஒன்று திரண்டன. ‘வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தை வலிமைப்படுத்துவதற்கான தேசியக் கூட்டமைப்பாக’ மாறின. நான் அதன் முதன்மை ஆலோசகராக இருக்கிறேன். தொடர் விவாதங்களுக்குப் பிறகு சட்டத்தை மேலும் பலப்படுத்துவதற்கான திருத்தங்கள் வரையப்பட்டன. சமூக நீதி மற்றும் அதிகாரமளிக்கும் துறையின் அமைச்சருக்கு 2009 நவம்பர் 19இல் அவை தெரியப்படுத்தப்பட்டன. அதில் இருந்த திருத்தங்கள் வருமாறு:

• விசாரணைக்கு முந்திய நடைமுறை மற்றும் வழக்கு விசாரணையை வேகப்படுத்த சிறப்பு தனி நீதிமன்றங்கள் அமைத்தல், சிறப்பு தனி அரசு வழக்கறிஞர், சிறப்பு தனி புலன் விசாரணை செய்யும் காவல் அதிகாரி ஆகியோர் சமூக நீதியில் அவர்களுக்கு இருக்கிற கடமை உறுதியிலிருந்து தேர்வு செய்யப்பட வேண்டும்.

• சட்டப் பிரிவு 3இல் குறிப்பிடப்படாத, ஆனால் தினசரி நடக்கக்கூடிய வன்கொடுமைகளைப் பட்டியலில் சேர்ப்பது. பெரிய உதாரணங்களாகக் கொலை, பலரைக் கொலை செய்தல், பாலியல் வன்கொடுமை, பலரைப் பாலியல் வன்கொடுமை செய்தல், குழுவாகப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவது, சமூகப் புறக்கணிப்பு பொருளாதாரப் புறக்கணிப்பு, சமூக மிரட்டல், பொருளாதார மிரட்டல் உள்ளிட்டவற்றைச் சேர்ப்பது.

• பிரிவு 10ஐத் திருத்துவது.

• பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகளின் உரிமைகளைப் பற்றிய புதிய பகுதியை இணைப்பது.

• நடப்பில் உள்ள சட்டத்தில் வன்கொடுமைகளை எத்தகைய பார்வையோடு, எவ்வாறு அணுக வேண்டும் என்று தரப்பட்டுள்ள வழிகாட்டல்களோடு கூடுதலாகப் புதியவற்றைச் சேர்த்தல்.

• சமூக சமத்துவம் உள்ளிட்ட அரசியல் சாசனத்தில் கட்டாயமாக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்தச் சமத்துவத்தை நோக்கித் தலித்துகள் எழும்போதெல்லாம் அவர்களைத் தைரியமிழக்கச் செய்து, தண்டித்திடவும் செய்யக்கூடிய நிலை இன்றும் தொடர்கிறது. இந்தச் சட்டத்தின்படியான வழக்கு விசாரணைகளின்போது வரலாற்று நீதியாகத் தலித்துகளுக்கு ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்தப் பாதிப்பு, அவமதிப்பு, இன்றும் அது தொடர்வது ஆகியவை நீதிமன்றங்களின் கணக்கில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

• பொதுவாக நீதிமன்றங்களும் வழக்கறிஞர்களும் இத்தகைய வரலாற்றுப் பிரச்சினையைக் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கும், துறைகளுக்கும்கூட இத்தகைய வரலாற்றுப் பின்னணி சம்பந்தமாகத் தெளிவான பார்வை இல்லை. அதனால் வழக்கறிஞர்களுக்கும் அவர்கள் போதுமான அளவு போதிப்பதில்லை. இதன் காரணமாக, ஒவ்வொரு வன்கொடுமையும் தனித்தனியாக எடுத்துக்கொள்ளப்படுகிறது; புரிந்துகொள்ளப்படுகிறது. அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு நீதி கிடைப்பதில்லை. உதாரணமாக கயிர்லாஞ்சி வன்கொடுமையைச் சொல்லலாம். சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள், துறைகள், வழக்கறிஞர்களுக்கும் வழக்கு விசாரணையைக் கொண்டு இருக்கும் மற்ற வழக்கறிஞர்களுக்கும் நீதிபதிகளுக்கும் இத்தகைய புதிய நோக்கு அவசியமானது. பாலியல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட தலித் - பழங்குடி மக்களின் விவகாரங்களைக் கையாளும்போது மேலே சொன்ன புதிய நோக்கு இருந்தால்தான் அவர்கள் முக்கியமான வரலாற்று ரீதியான விஷயங்களையும் தற்போதைய பின்னணியையும் பார்க்கத் தவற மாட்டார்கள்.

• பலரை ஒரே சமயத்தில் பலர் கொலை செய்தல், குழுவாகப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுதல், பலரை ஒரே சமயத்தில் பலர் பாலியல் வன்கொடுமை செய்தல் ஆகிய குற்றங்களை இந்தச் சட்டத்தின் கீழ் அரிதினும் அரிதானதாகக் கருதும் வகையில் சட்ட ரீதியாக ஆக்குதல்.

• தண்டனையை மேம்படுத்துதல். உதாரணமாக, தலித் - பழங்குடி மக்களின் நிலங்களைச் சட்ட விரோதமாக ஆக்கிரமித்ததற்காகத் தண்டிக்கப்பட்ட ஒருவரின் நிலங்களைப் பறித்தல், தலித்துகள் - பழங்குடிகளைக் கொத்தடிமைகளாகக் கட்டாயப்படுத்தி வேலைசெய்ய வைக்கப்பட்ட அரவை ஆலைகள், நிலங்கள், செங்கல் சூளைகள் உள்ளிட்ட இடங்களையும் மற்ற சொத்துகளையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு விநியோகம் செய்தல்.

• பொருளாதாரத் தன்மையுள்ள குற்றத்துக்குச் சிறைத் தண்டனையுடன் கூடுதலாகப் பொருளாதாரத் தன்மையான தண்டனையும் தர வேண்டும். ஊழல் தடுப்புச் சட்டத்தில் இதற்கான முன்னுதாரணம் இருக்கிறது.

• தலித்துகளுக்கு இந்தச் சட்டத்தால் கிடைக்கக் கூடிய பாதுகாப்பு, இதே தலித் சாதிகளைச் சேர்ந்த, ஆனால் இந்து மதம், சீக்கிய மதம், புத்த மதம் அல்லாத வேறு மதத்தைக் கடைப்பிடிக்கிற தலித்துகளுக்குக் கிடைப்பதில்லை. அதைத் தடுக்கிற அரசு ஆணைகளை மாற்ற வேண்டும்.

• இந்தச் சட்டத்தின் கீழ் பணியாற்றும் அதிகாரிகளுக்கான கடமைகள் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டும். அத்தகைய கடமைகளைச் செய்யத் தவறுபவர்களுக்குப் பொருத்தமான தண்டனை விதிக்கப்பட வேண்டும்.

• தலித் - பழங்குடி மக்களுக்கு எதிராக வன்கொடுமை புரிகிற அரசு ஊழியருக்கு அதிகப்படியான தண்டனை வழங்கப்பட வேண்டும். இது வாச்சாத்தி வன்கொடுமைகளைப் போன்ற சூழ்நிலைகளை எதிர்கொள்ள உதவும்.

• வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் அமலாக்கத்துக்காக தேசியக் கண்காணிப்பு மற்றும் அமலாக்க ஆணையம், மற்றும் மாநிலக் கண்காணிப்பு மற்றும் அமலாக்க ஆணையம் அமைக்கப்பட வேண்டும். தேசிய அளவிலும் மாநில அளவிலும் உள்ள தலித், சிவில் சமூகத்தை ஒருங்கிணைத்து ஒழுங்கமைத்து பங்கேற்கச் செய்ய வேண்டும்.

• இந்த ஆணையங்கள் அரசு இயந்திரத்துக்கான மாற்று அல்ல. அதிகாரபூர்வமான அரசு இயந்திரத்துக்கு உதவும் வகையிலான இணைப்புகளே இவை.

• அரசு நிர்வாக இயந்திரம் என்பது அது தன்னளவில் சரியானதாக இருப்பதில்லை. அரசியல் சாசனத்துக்கும், சமூக நீதிக்கும் கடமை உறுதியோடு பணியாற்ற விரும்பும் அமைச்சர்கள் அல்லது அதிகாரிகள் அதன் பணிகளில் மையமாக இருக்கும்போது அரசு இயந்திரம் விதிவிலக்காகச் செயல்படுகிறது.

• இந்தியத் தண்டனை சட்டத்துக்கும், அரசியல் சாசனத்துக்கும் தேவைப்படுகிற திருத்தங்கள் சம்மந்தப்பட்டவை.

• வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், அதன் விதிகள், அதன் அமலாக்கத்தோடு நேரடியாகத் தொடர்புடைய இந்தக் கோரிக்கைகளோடு கூட, இந்தியத் தண்டனைச் சட்டத்துக்கு (பிரிவு 41) சமீபத்தில் செய்யப்பட்ட திருத்தத்தின் தாக்கம், மற்றும் அரசியல் சாசனத்தின் 7ஆவது அட்டவணையில் உள்ள, கூட்டுப்பட்டியலின் மூன்றாம் பட்டியலில், ‘பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் பாதுகாப்பு, நலவாழ்வு, வளர்ச்சி’ என்னும் வரியைப் புதிதாக இணைக்க வேண்டும்.

(நேர்காணலின் நிறைவுப் பகுதி நாளை...)

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon