மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 15 ஏப் 2018

விஜயகாந்த்துக்குப் பாராட்டு விழா!

விஜயகாந்த்துக்குப் பாராட்டு விழா!

கலைத்துறையில் 40 ஆண்டுகளைக் கடந்துள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு இன்று காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் பாராட்டு விழா நடைபெறுகிறது.

1978ஆம் ஆண்டு திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய தேமுதிக தலைவர் விஜயகாந்த் இதுவரை 150 திரைப்படங்களில் நடித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக பதவி வகித்த விஜயகாந்த், 2005ஆம் ஆண்டு தேமுதிகவைத் தொடங்கினார். அதன்பிறகு எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

விஜயகாந்த் கலைத்துறைக்கு வந்து இத்துடன் 40 வருடங்கள் நிறைவடையவுள்ள நிலையில், அவருக்கு இன்று (ஏப்ரல் 15) பாராட்டு விழா நடைபெறவுள்ளது. இதுகுறித்து தேமுதிக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கலையுலகின் 40ஆம் ஆண்டு பாராட்டு விழா மாநாடு காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை சாலை, கரசங்களில் இன்று காலை 11.00 மணியளவில் மங்கல வாத்தியத்துடன் தொடங்கி, கலைநிகழ்ச்சி, பட்டிமன்றம் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. மாலை 6.00 மணிக்கு மேல் சினிமா கலைத்துறையின் நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், கலையுலகச் சார்ந்த பிரமுகர்கள் என அனைவரும் கலந்துகொள்கிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

விழாவுக்கான ஏற்பாடுகளை பிரேமலதா விஜயகாந்த் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாளை (இன்று) காலை 11 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கி, இரவு 8 மணி வரை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. 11 மணி முதல் மாலை 5 மணி வரை கட்சி நிகழ்ச்சிகள் நடைபெறும். அதன் பிறகு விஜயகாந்த் பற்றிய வாழ்க்கை வரலாறு காணொளியும் ஒளிபரப்பப்பட இருக்கிறது. அதைத் தொடர்ந்து திரைத் துறையைச் சேர்ந்தவர்கள் விஜயகாந்த் குறித்தும் சினிமா குறித்தும் பேசுவார்கள்” என்று கூறியுள்ளார்.

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon