மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 15 ஏப் 2018

ஸ்பெஷல்: உணவின் சுவையைக் கூட்டும் பூக்கள்!

ஸ்பெஷல்: உணவின் சுவையைக் கூட்டும்  பூக்கள்!

காய்கறிகள், பழங்கள், கீரைகள் போலவே பூக்களையும் சமைக்கவும் சுவைக்கவும் முடியும். உணவுகளில் பூக்களுக்கு என முக்கிய இடம் உண்டு. பூக்களை வதக்கியோ, அவித்தோ, நறுக்கியோ உணவில் சேர்க்கலாம். முதன்முறையாக பூக்களை உண்பீர்கள் என்றால், வித்தியாசமான உணர்வு ஏற்படும். ஆனால், நிச்சயம் அதன் சுவை உங்களை ஈர்க்கும். சமையலில் சாப்பிடத் தகுதியான, நம்முடைய வீட்டுத் தோட்டங்களில் வளரக்கூடிய பூக்களையே நாம் பயன்படுத்தலாம்.

ரோஜா

மலர்களில் மிகவும் சிறப்புமிக்கதும் காதலுக்கு உகந்ததுமாகப் பார்க்கப்படும் ரோஜா, இந்திய மற்றும் சீன பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. பூக்களுக்கெல்லாம் இளவரசியான ரோஜாவில், வைட்டமின் சி அதிகமாக இருக்கிறது. பொதுவாக ரோஜா எசென்ஸ், உணவுகளில் நிறமியாக சேர்க்கப்படுகிறது. ரோஸ் வாட்டர், சிரப் போன்றவை இனிப்பு வகைகள் செய்வதில் பயன்படுத்தப்படுகின்றன. உணவின் மீது அலங்காரத்திற்காகவும் ரோஜா இதழ்கள் தூவப்படுகின்றன.

செம்பருத்தி

​வீட்டுத் தோட்டங்களில் பரவலாகக் காணப்படும் மலர் செம்பருத்தி. சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் காணப்படும் இந்த மலர், தேநீர் தயாரிக்க உகந்தது. செம்பருத்தி மலர்கள் குளிர்ச்சித் தன்மையும் இனிப்பு சுவையும் கொண்டவை. 15 செம்பருத்தி இதழ், 2 ஆடு தொடா இலை இரண்டையும் தண்ணீரில் கொதிக்கவிட்டு வடிகட்டி, தேன் கலந்தால் ஹைபிஸ்கஸ் தேநீர் தயாராகிவிடும். தேநீருக்குப் பதிலாக ஹைபிஸ்கஸ் டீ தொடர்ந்து பருகிவந்தால் இருமல், நுரையீரல் உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம்.

சாமந்தி

​சிவப்பும் மஞ்சளும் கலந்து, கண்களை ஈர்க்கும் அழகிய மலர் சாமந்தி. இது அழகு மட்டுமல்ல, ஆரோக்கியமும்கூட. சமையல் முடிந்ததும் அழகுக்காகச் சேர்க்கப்படும் மல்லி, புதினாவோடு, சாமந்தியையும் தூவிவிடலாம். இதன் தனித்துவமான நிறம், உணவுக்கு அழகு சேர்க்கும். சீனர்களுக்கு சாமந்தி டீ விருப்பமான பானம். வைட்டமின் சி அதிகமாக இருப்பதால், கண் சார்ந்த பிரச்சினைகளைத் தீர்க்கும். அது மட்டுமின்றி தலைவலி, மூட்டுவலி உள்ளிட்ட பிரச்சினைகளைக் குறைக்கவும் உதவும்.

இஞ்சி மலர்

​சமையலில் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான பொருள் இஞ்சி. இஞ்சியின் சுவையும் நறுமணமும் அப்படியே அதன் மலர்களிலும் இருக்கின்றன. இந்த மலர்களிலிருந்து பெறப்படும் எண்ணெய், சமையலில் பயன்படுத்தப்படுகிறது. தவிர, இஞ்சியின் மருத்துவக் குணங்கள் முழுவதும் அதன் மலர்களிலும் உண்டு என்பதால், இதன் மலர்கள் தாளித்தோ, நேரடியாகவோ உணவில் சேர்க்கப்படுகிறது.

புதினா மலர்

உணவில் வாசனைக்காக புதினா இலை சேர்க்கப்படுகிறது. புதினா சட்னி, புதினா புலாவ், புதினா சாதம் என புதினா இலையையே அதிகமாக சமைத்திருப்போம். ஆனால் புதினாவின் மலரும் உண்ணத்தகுந்ததே. இலை தரும் சுவையையும் மணத்தையும் மலரும் தரும். டெசர்ட், சாலட் மற்றும் ஜூஸ்களில் புதினா மலரைச் சேர்க்கலாம். இது சோர்வை நீக்கும், செரிமானத்தைச் சீர் செய்யும்.

சுகந்தி பூ (லாவண்டர்)

பார்த்ததும் மனம்கவரும் ஊதா நிறப் பூ சுகந்தி. வாசம் மிக்க இந்த மலர், எண்ணெய் வடிவில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. குளியலறையில் பயன்படுத்தப்படும் லாவண்டர் எண்ணெய் கிருமிநாசினியாகச் செயல்படுகிறது. சமையலறையில் இதன் பூக்கள், வாசனைக்காகச் சேர்க்கப்படுகிறது. குறிப்பாக ஐஸ்க்ரீம் தயாரித்தலில் பெரிதும் பயன்படுகிறது. டீ தயாரித்துவிட்டு, அதன் மீது இப்பூவை தூவிவிட்டுப் பருகினால், வித்தியாசமான மணமும் சுவையும் கிடைக்கும்.

சிட்ரஸ் பூக்கள்

சிட்ரஸ் பூக்கள் என்பவை, சிட்ரஸ் அமிலம் அதிகமாக இருக்கக்கூடிய எலுமிச்சை, ஆரஞ்சு மற்றும் நார்த்தங்காய், சாத்துக்குடி ஆகியவற்றின் மலர்களே. பழங்கள் புளிப்பு சுவையோடு இருந்தாலும், இவற்றின் மலர்கள் இனிப்பு சுவை கொண்டவை. குறிப்பாக இதன் மணத்துக்காக உணவுகளில் சேர்க்கப்படுகிறது. ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை மலர்களில் டீ தயாரிக்கலாம். இனிப்பு வகைகளில் இம்மலர்கள் சேர்க்கப்படுகின்றன. மத்திய கிழக்குப் பகுதி மற்றும் பிரான்ஸ் நாடுகளில், ஆரஞ்சு மலர்களை அதிகமாக உணவுகளில் சேர்க்கிறார்கள். கூடுதலாக இம்மலர்களை எண்ணெய் வடிவிலோ, சிரப் வடிவிலோ பயன்படுத்தலாம். எலுமிச்சைப்பூ டீ, ஆரஞ்சுப்பூ சீஸ் கேக், எலுமிச்சை பூ ஸ்மூத்தி எனப் பல வகை உணவுகள் சிட்ரஸ் மலர்களால் தயாரிக்கலாம்.

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon