மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 15 ஏப் 2018

‘யு டர்ன்’ ரீமேக்கில் இணைந்த பூமிகா

‘யு டர்ன்’ ரீமேக்கில் இணைந்த பூமிகா

நடிகை சமந்தா நடிப்பில் உருவாகிவரும் ‘யு டர்ன்’ படத்தின் ரீமேக்கில் இணைந்துள்ளார் நடிகை பூமிகா.

பத்ரி, ரோஜா கூட்டம், ஜில்லுனு ஒரு காதல் போன்ற படங்களில் நடித்திருந்தவர் நடிகை பூமிகா. திருமணத்திற்குப் பிறகு பட வாய்ப்புகளை ஏற்காமல் இருந்துவந்த இவர், தற்போது மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் களவாடிய பொழுதுகள் திரைப்படம் வெளியானது. இந்த நிலையில் கன்னடத்தில் 2016ஆம் ஆண்டு வெளியான படம் ‘யு டர்ன்’. பவன் குமார் இயக்கியிருந்த இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள இதில் ஷ்ரதா ஸ்ரீநாத் நடித்திருந்தார். இந்தப் படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக்கில் சமந்தா நடிக்கிறார். இந்தப் படத்தில் ஆதி, நரேன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். நடிகை பூமிகாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் கன்னடத்தில் ராதிகா சேட்டன் நடித்திருந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார்.

இந்தப் படத்தின் இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு நேற்று ஹைதராபாத்தில் ஆரம்பமானது. அதில் பூமிகா கலந்துகொண்டார். தற்போது சமந்தா, பூமிகா, நரேன், ஆதி ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கிவருவதாகப் படத்தின் இயக்குநர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

பரபரப்பான த்ரில்லர் படமாக உருவாகிவரும் இந்தப் படத்தை சில்வர் ஸ்க்ரீன் நிறுவனம் சார்பில் ஸ்ரீனிவாசா தயாரிக்கிறார். இந்த வருடக் கடைசியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்த் திரையுலகத்தில் தற்போது எந்த வேலையும் நடைபெறவில்லை என்றாலும் இந்தப் படம் இருமொழிப் படம் என்பதால் இதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறுகிறது.

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon