மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 15 ஏப் 2018

சண்டே சக்சஸ் ஸ்டோரி: நடராஜன் (கே.பி.என்)

சண்டே சக்சஸ் ஸ்டோரி: நடராஜன் (கே.பி.என்)

ஆம்னி பேருந்துகள் என்றாலே தமிழ்நாட்டில் மிகப் பிரபலமான நிறுவனங்களில் ஒன்று கே.பி.என் டிரான்ஸ்போர்ட்ஸ். அதன் நிறுவனர் நடராஜன் குறித்து இந்த வார சக்சஸ் ஸ்டோரியில் காணலாம்.

நடராஜனுக்குக் குழந்தைப் பருவம் முதலே பேருந்துகள் என்றாலே அலாதிப் பிரியம். பேருந்துகளைப் பார்த்தாலே பரவசமாகி விடுவார். எப்போதும், பேருந்துகளைப் பற்றிச் சிந்திப்பவராகவே இருந்தார். அதனாலோ என்னவோ படிப்பின் மீது ஆர்வம் செல்லவே இல்லை. இவருடைய தந்தைக்கோ இவரைக் காவல் துறை அதிகாரியாக்கிப் பார்க்க ஆசை. ஆனாலும் அவருடைய கனவு நிறைவேறவில்லை. இருப்பினும் தன்னுடைய தந்தை எதிர்பார்த்ததைவிட மிகப்பெரிய மனிதராக இன்று வளர்ந்திருக்கிறார் நடராஜன்.

சேலம் மாவட்டத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் நடராஜன். பள்ளிப் படிப்பில் ஆர்வமற்ற மாணவராக, தனது படிப்பை ஏழாம் வகுப்பிலேயே நிறுத்திக்கொண்டார். வாகனத் துறையின் மீது இருந்து தீராக் காதலால் அண்ணனுடைய பேருந்தில் கிளீனர் பணியில் சேர்ந்தார். அப்போது பேருந்து அதிபராக வேண்டுமென்ற ஆர்வமெல்லாம் அவருக்கு இல்லை. ஓட்டுநராக வேண்டும் என்ற ஆசைதான் அதிகமாக இருந்தது. கிளீனராகப் பணியில் சேர்ந்த இவர், விடாமுயற்சியால் ஓட்டுநரானார்.

இன்று ஆம்னி பேருந்துத் துறையில் வெற்றிகரமாக இயங்கிக்கொண்டிருக்கும் இவருடைய தொடக்கக்காலக் கதை சற்றே சுவாரஸ்யமானது. சேலத்திலிருந்து சுற்றுலாப் பயணத்துக்குச் செல்லும் வண்டியில்தான் நடராஜன் கிளீனராகப் பணிபுரிந்தார். சேலம் பேருந்து நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த வண்டி பதினைந்து நாள்களுக்கு மேல் ஓடாமலேயே நின்றுகொண்டிருந்தது. திடீரென சிலர் ‘கோயம்புத்தூர் போகலாமா?’ எனக் கேட்டுள்ளனர். நடராஜனும் உடனடியாகச் சம்மதித்து கோயம்புத்தூர் அழைத்துச் சென்று ரயில் நிலையத்தில் அவர்களை இறக்கி விட்டுள்ளார். பயணிகள் வாகனமாக இயக்க அனுமதி பெற வேண்டும் என்று கூட அப்போது இவருக்குத் தெரியாதாம்.

அவர்களை இறக்கிவிட்ட பின்னர் ரயில் நிலையத்திலிருந்த சிலர் பெங்களூரு போகலாமா எனக் கேட்டுள்ளனர். உடனே அங்கே மேலும் சில பயணிகளை ஏற்றிக்கொண்டு இருக்கைகளை நிரப்பி பெங்களூருவுக்கு வண்டியுடன் புறப்பட்டுவிட்டார். பின்னர் அங்கிருந்து சேலம் வந்தடைந்தார். நடராஜனுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கத்தின் தொடக்கம் இதுதான். சுற்றுலாப் பயண இயக்கத்தைவிட இந்த முறையில் வெளியூர்களுக்கான பயண வண்டியை இயக்குவது லாபகரமானதாகத் தெரிந்ததால் நடராஜனின் அண்ணனும் இவ்வாறே வண்டியை இயக்க முடிவு செய்தார். சேலத்திலிருந்து இரவு நேரங்களில் பேருந்து இயக்கும் முதல் நிறுவனமாக இவர்களுடைய நிறுவனம் உருவானது.

சில காலத்துக்குப் பின்னர் புதிதாக வண்டிகள் வாங்கி இருவரும் தனித்தனியாக இயங்க முடிவு செய்தனர். மூன்றாண்டுகள் இப்படியே கழிந்துவிட்டது. இந்த நிலையில் 1971ஆம் ஆண்டில் நடராஜன் திருமணம் செய்தார். அதுமட்டுமின்றி, நடராஜனின் அண்ணன் ஆம்னி பேருந்து இயக்கத்தை விட்டு பயணிகள் பேருந்தை இயக்க முடிவு செய்தார். இதனால் விருப்பமில்லாத நடராஜன் ஆம்னி பேருந்தைச் சொந்தமாக வாங்கி இயக்கத் திட்டமிட்டார். ஆனால், இவருடைய தந்தை வெறும் 5,000 ரூபாய் மட்டுமே இவருக்கு அளித்துள்ளார். அன்றைய காலகட்டத்தில் (1972) ஆம்னி பேருந்தின் விலை 2.50 லட்சம் ரூபாயாக இருந்துள்ளது. ஆனாலும் சோர்ந்துவிடாமல் மனைவியின் நகைகளை விற்றும், நண்பர்களிடம் கடன் வாங்கியும் 40,000 ரூபாய் தயார் செய்தார். இந்தத் தொகையைக் கொண்டு ஃபைனான்ஸ் மூலமாக ஆம்னி பேருந்து வாங்கினார். இந்தப் பேருந்துக்குத் தாத்தா பெயர், அப்பா பெயர், தன்னுடைய பெயர் என மூவர் பெயரையும் இணைத்து கே.பி.என் என்று பெயர் சூட்டினார்.

வண்டி வாங்கிய புதிதில் வண்டியை இவரே ஓட்டினார். இவரே பல நாள்கள் ஓட்டுநராகப் பணியாற்றியதால் வாகனம் பற்றிய புரிதலும், தொழில் நுணுக்கங்களையும் எளிதில் கற்றுக்கொண்டார். முதன்முதலில் திருநெல்வேலி முதல் பெங்களூரு வரை இயக்கினார். ஓட்டுநராக இருந்து பணியாற்றிய அனுபவம்தான் இன்று கே.பி.என் மக்களின் நம்பிக்கைக்குரிய நிறுவனமாக விளங்குவதற்கான காரணமாக உள்ளது. மக்கள் கூறிய குறைகளை அவ்வப்போது பேருந்தில் மாற்றம் செய்து வந்துள்ளார் இவர். அதனால்தான் இன்று கே.பி.என் அனைத்து வசதிகளும் பொருந்திய பயணச் சேவை வழங்கும் நிறுவனமாக உள்ளது.

பேருந்தில் பயணிக்கும்போது மக்கள் பாதுகாப்பான ஒரு பயணத்தையே விரும்புவர். அவ்வாறு ஒரு பாதுகாப்பான பயணத்தை வழங்க ஓட்டுநர்கள் தேர்வில் மிகுந்த அக்கறையை எடுத்துக்கொள்கிறது கே.பி.என் நிறுவனம். இவர்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வோர் ஓட்டுநரும், குறிப்பிட்ட அந்தப் பேருந்தின் தயாரிப்பு நிறுவனத்தில் மூன்று மாத காலம் பயிற்சி பெறுகின்றனர். அதேபோல 20 நாள்களுக்கு ஒருமுறை ஓட்டுநர்களுக்கு ஊதியம் வழங்கும் முறையையும் கே.பி.என் பின்பற்றி வருகிறது. மிகவும் சொகுசான, பாதுகாப்பான பயணத்தை வழங்குவதில் கே.பி.என் முன்னோடி நிறுவனமாக உருவாகியுள்ளது. வாரம் ஒருமுறை ஊழியர்களுக்கான கூட்டத்தையும் நடத்தி வருகிறது. பயணிகளின் தேவையையும், பாதுகாப்பையும் கருத்தில்கொண்டு சிறப்பான சேவையைத் தொடர்ந்து நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கி வருகிறது கே.பி.என். நடராஜனின் உழைப்பு ஒன்றே கே.பி.என் நிறுவனத்தின் வெற்றியில் பெரும் பங்குக்குக் காரணமாக உள்ளது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

தொகுப்பு: பிரகாசு

மின்னஞ்சல் முகவரி: [email protected]

சென்ற வார சண்டே சக்சஸ் ஸ்டோரி: ஸ்ரீ சிவ்குமார் (எஸ்.கே.எம் பெஸ்ட் ஹெக்ஸ்)

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon