மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 15 ஏப் 2018

நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம்!

நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம்!

காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த நாளை அண்ணா அறிவாலயத்தில் மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கால அவகாசம் முடிந்த நிலையில், திமுகவும் அதன் தோழமைக் கட்சிகளும் முதற்கட்டமாக மறியல் போராட்டங்களையும், கடந்த 5ஆம் தேதி முழு அடைப்பையும் நடத்தினர். அதன் பிறகு மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூடி முடிவெடுத்து, இரண்டாம் கட்டப் போராட்டமாக ஸ்டாலின் தலைமையில் காவிரி உரிமை மீட்புப் பயணத்தை நடத்தினர்.

பயணம் நிறைவுற்ற நிலையில் நேற்று முன்தினம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்திய ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப் பிரதமரை வலியுறுத்துமாறு ஆளுநரைச் சந்தித்து மனுவும் அளித்தனர்.

இந்தச் சூழ்நிலையில் காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்வதற்காக நாளை (ஏப்ரல் 16) மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்வதற்காக ஏப்ரல் 16ஆம் தேதி திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயம் முரசொலி மாறன் கூட்ட அரங்கில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon