மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 15 ஏப் 2018

நான் பாதுகாப்பாக உணரவில்லை!

நான் பாதுகாப்பாக உணரவில்லை!

காஷ்மீர் சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குட்பட்டுக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வளர்ச்சி குறித்து ஒருபக்கம் பேசிக்கொண்டும் நாகரிகமடைந்த சமூகம் எனக் காட்டிக்கொண்டும் இருந்தாலும் பெண்களுக்கு எதிரான, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து நடைபெறுவதும் அது சாதி, மத வெறி மூலம் நாளுக்கு நாள் அதிகரிப்பதும் நடைபெற்று வருகிறது.

இக்கொடூர சம்பவத்துக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் குரல் கொடுத்துவருகின்றன. பொதுமக்களும் தங்களது காத்திரமான கண்டனங்களை சமூக வலைதளங்கள் மூலம் வைக்கின்றனர். நடிகை வரலட்சுமி, ‘சக்தி’ என்ற அமைப்பு தொடங்கி பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைச் செய்துவரும் சமூக விரோதிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரும் நோக்கோடு செயல்பட்டு வருகிறார். காஷ்மீர் சிறுமி சம்பவம் குறித்து நேற்று (ஏப்ரல் 14) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மக்களின் கோபமும் ஆவேசமும் ஒரே நாளில் வடிந்துவிடக் கூடாது என்பதை அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். “அரசியல்வாதிகள், பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகள், குழந்தைகள் மேல் காமுறும் பேய்களின் கைகளில் சிக்கி நாம் சின்னாபின்னமானது போதாதா? நான் உங்களை இரந்து கேட்டுக்கொள்கிறேன். எதிர்த்து கேள்வி கேளுங்கள், நியாயமான, நல்ல விஷயங்களுக்காக எதிர்த்து நில்லுங்கள். உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். ஆனால் தயவுசெய்து எதாவது செய்யுங்கள். ஜல்லிக்கட்டு, காவிரி, ஏன் ஒரு கண் சிமிட்டலை டிரெண்டிங் ஆக்க முடிந்தது நம்மால்... ஒரு குழந்தையின், ஓர் உயிரின், மதிப்பு என்பது ஒரே ஒருநாள் கோபத்துக்கும் இரங்கலுக்கும் மட்டுமே உரியதா? நாம் அனைவரும் இணைவோம், நியாயம் கேட்போம்” என்று கூறியுள்ளார்.

தண்டனைகள் கடுமையானால் தவறுகள் குறையும் என்ற வாதம் ஒவ்வொரு சம்பவத்துக்குப் பின்னரும் வலுப்பெறும். வரலட்சுமியும் அதை முன்னெடுத்துள்ளார். “பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை மட்டுமே ஒரே தீர்வு என்று ஒரு சட்டம் இயற்றப் போராடுவோம். சக இந்தியர்களை நான் இருகரம் கூப்பி இரந்து அழைக்கிறேன். இதுவே சரியான நேரம். நியாயமான விஷயங்களுக்கு குரல் கொடுங்கள். எதிர்த்து நில்லுங்கள். பாலியல் வன்கொடுமை என்பது நாம் சகித்துக்கொண்டு செல்லும் ஒரு விஷயமில்லை. நான் ஒரு பெண். உண்மையாகவே நான் பாதுகாப்பாக உணரவில்லை” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon