மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 14 ஏப் 2018

டிஜிட்டல் திண்ணை: ரஜினி ஒதுங்குகிறாரா? பதுங்குகிறாரா?

டிஜிட்டல் திண்ணை:  ரஜினி ஒதுங்குகிறாரா? பதுங்குகிறாரா?

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. வாட்ஸ் அப்பில் இருந்து வந்து விழுந்தது மெசேஜ்.

“அரசியல் என்று ரஜினி முடிவெடுத்து, தமிழ்நாடு முழுக்க உறுப்பினர்களைச் சேர்க்கும் வேலையை தொடங்கினார். அதற்காக இணையதளம் உருவாக்கப்பட்டு அதன் வழியாகவும், நேரடியாகவும் ரஜினி மன்றத்துக்கு உறுப்பினர் சேர்க்கை தொடங்கியது. மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமிக்கும் பொறுப்பும் ராஜூ மகாலிங்கம், சுதாகர் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இமயமலையில் இருந்து திரும்பி வந்த ரஜினி, உறுப்பினர்கள் சேர்க்கை தொடர்பாகத்தான் முதலில் விசாரித்திருக்கிறார். முதல் இரண்டு வாரங்களில் இருந்த ஆர்வம் அடுத்து வந்த நாட்களில் இல்லை என நிர்வாகிகள் சொல்லியிருக்கிறார்கள். எப்படியும் ஒரு கோடி பேர் உறுப்பினர்கள் ஆவார்கள் என ரஜினி எதிர்பார்த்திருந்தார். ஆனால், இதுவரை 10 லட்சத்தையே தாண்டவில்லையாம்.

உடனடியாக தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் சீக்ரெட் சர்வே ஒன்றை ரஜினி நடத்தியிருக்கிறார். சர்வே நடத்திய தனியார் நிறுவனம் கொடுத்த ரிப்போர்ட் இதுதான்... ‘இதுவரை உங்கள் மன்றத்தில் உறுப்பினர்களாக சேர்ந்தவர்கள் எல்லோருமே, பெரும்பாலும் உங்கள் ரசிகர்களாக இருந்தவர்கள்தான். ரசிகர் அல்லாத பொதுமக்கள் என யாரும், புதிய உறுப்பினர்களாக பெரிய அளவில் சேரவில்லை. அவர்கள் யோசிக்கும் இரண்டு விஷயம்... ஒன்று நீங்கள் சொன்ன ஆன்மீக அரசியல். இது பிஜேபியின் இன்னொரு வடிவமாகத்தான் இருக்கும் என நினைக்கிறார்கள். இன்னொன்று, உங்களை அவர்கள் தமிழராக ஏற்றுக்கொள்ளவில்லை. கர்நாடகாவை சேர்ந்த ஒரு கன்னடராகத்தான் பார்க்கிறார்கள். என்னதான் நீங்கள், இதுதான் என்னுடைய ஊரு என்று சொல்லிக் கொண்டாலும் உங்கள் எண்ணம், செயல் எல்லாம் கர்நாடகாவை நோக்கித்தான் இருக்கும் என அவர்கள் யோசிக்கிறார்கள். இதெல்லாம்தான் உங்களை அவர்கள் தலைவராக ஏற்றுக்கொள்ளாமல் இருக்கக் காரணம்.

உங்களுக்கு முன்பு கமல் கட்சி தொடங்கியதும் கூட, உங்களுக்கு ஒரு மைனஸ்தான். நீங்கள் என்னதான் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், உங்களுக்கு முன்பாக கமல் கட்சி தொடங்கிவிட்டார். மாற்றம் வேண்டும் என நினைத்த ஒரு கூட்டம் கமல் பக்கம் போய்விட்டது. கமல் குழப்புகிறார் என்றாலுமே, அவர் கட்சி தொடங்கிவிட்டார். நீங்க தொடங்குவதற்கே யோசிச்சுட்டுதானே இருக்கீங்க என்று மக்கள் நினைக்கிறாங்க. அதனால் இந்த சூழ்நிலையில் நீங்க கட்சி தொடங்கினாலும் அதற்கு வரவேற்பு இருக்குமா என்பது சந்தேகமே!’ என்று வெளிப்படையாகவே அந்த ரிப்போர்ட்டில் சொல்லப்பட்டு இருந்ததாம்.

அதன் பிறகு வழக்கம் போல தனது நண்பர்களை அழைத்துப் பேசிய ரஜினி, ‘நான் இமயமலையில் இருக்கும்போதே இதை யோசிச்சேன். அதைத்தான் சர்வே ரிப்போர்ட்டில் சொல்லி இருக்காங்க. இப்போ இருக்கும் சூழ்நிலையில் அவசரப்பட்டு கட்சி ஆரம்பிக்க வேண்டாம்னு எனக்கு தோணுது. மன்றத்துக்கு ஆட்களை சேர்ப்பது சேர்த்துட்டே இருக்கட்டும். அதன் மூலமாகவே நற்பணிகள் செஞ்சுட்டு இருப்போம். அரசியல் கட்சி தொடங்குவதை எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். இப்போ கட்சி தொடங்கி அது ஃபெயிலியர் ஆகிட்டால், நமக்கு இருக்கிற பேரும் போயிடும். அதனால் இப்போதைக்கு கட்சியும் வேண்டாம்.. அரசியலும் வேண்டாம்..’ என சொன்னதாக ஒரு தகவல் உலவுகிறது.

இதுபற்றி ரஜினியின் அரசியல் ஆலோசகர்கள் சிலரிடம் பேசினோம். ‘ரஜினி தெளிவாகத்தான் இருக்கிறார். ஆனால் அவரை நினைத்து சிலர் குழப்பிக் கொண்டு பலரையும் குழப்புகிறார்கள். நேற்று கூட மத்திய சென்னை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பட்டியல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ரஜினி சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக கட்சி ஆரம்பிப்பேன் என்று சொன்னார். இப்போது சட்டமன்றத் தேர்தல் வருமா என்ற சூழல், இன்னும் தெளிவாகவில்லை. ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றிபெற்ற பிறகு பேட்டியளித்த தினகரன், ‘இன்னும் மூன்று மாதத்தில் இந்த ஆட்சி கவிழும்’ என்றார். அப்போது அதுபற்றி சென்னை விமான நிலையத்தில் ரஜினியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘இப்பவே எப்டிங்க சொல்ல முடியும்?’ என்று சிரித்தார். இது நடந்து நான்கு மாதங்கள் ஓடிவிட்டன. எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு ஆபத்து வந்தால் ஒழிய சட்டமன்றத் தேர்தலுக்கு வாய்ப்பில்லை. தன்னை சந்திக்கிறவர்களிடம் ரஜினி, ‘நான் பிரதமர் வேட்பாளர் இல்ல, முதல்வர் வேட்பாளர்தான்’ என்று சொல்லி வந்திருக்கிறார்.

எனவே எடப்பாடி ஆட்சிக்கு ஆபத்து என்ற நிலையில் தேர்தல் வரும்போதுதான், ரஜினியின் அரசியல் பிரவேசம் உண்டா இல்லையா என்பதை முடிவு செய்ய முடியும். இப்போது அதற்கான காலம் இல்லை. ரஜினி அரசியல் என்னும் புலிவாலைப் பிடித்துவிட்டார். அதனால் விட்டுவிட முடியாது. தவிர, அரசியலுக்கு வரவில்லை என்று ரஜினி அறிவிக்கும் பட்சத்தில் அது அவரது மீதமிருக்கும் சினிமா செல்வாக்கையும் குலைத்துவிடும். எனவே சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில்தான் ரஜினியின் கட்சி அறிவிப்பை எதிர்பார்க்க வேண்டும்’ என்கிறார்கள். மேலும், ‘உறுப்பினர்களை சேர்த்துட்டே இருக்கட்டும். நிர்வாகிகள் நியமனமும் தொடர்ந்து நடக்கட்டும்’ என்றும் சொல்லியிருக்கிறாராம் ரஜினி” என்று முடிந்தது அந்த மெசேஜ்.

அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்த ஃபேஸ்புக், “ரஜினி கட்சி தொடங்கிவிடுவார் என்ற ஆர்வத்தில்தான் கமல் வேகமாக கட்சி ஆரம்பித்தார். ரஜினி இப்படி யோசிப்பார் என்பது தெரிந்திருந்தால், கமலும் கமுக்கமாக இருந்திருப்பார்” என்ற கமெண்ட்டை போட்டுவிட்டு சைன் அவுட் ஆனது.

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

காவலருடன் வாக்குவாதம்: வழக்கறிஞர் விரைவில் கைது!

4 நிமிட வாசிப்பு

காவலருடன் வாக்குவாதம்: வழக்கறிஞர் விரைவில் கைது!

சனி 14 ஏப் 2018