பிகாரில் மயூரா விரைவு ரயிலுக்குள் தண்டவாளத்தின் ஒரு துண்டு புகுந்து விபத்துக்குள்ளானதில் பயணி ஒருவர் பலியானார்
உத்தரப் பிரதேசம் மாநிலம், கோரக்பூர் நகரை நோக்கிச் சென்ற மயூரா விரைவு ரயில் இன்று (ஏப்ரல் 14) அதிகாலை சுமார் 3.30 மணியளவில் பிகார் மாநிலத்தின் லக்கிசாராய் மாவட்டத்தில் உள்ள பன்சிப்பூர் நிலையத்தைக் கடந்தது. அப்போது, 10 மீட்டர் நீளம் கொண்ட சுமார் 600 கிலோ எடையுள்ள தண்டவாளத்தின் ஒரு துண்டு, ரயில் பெட்டியின் அடிப்பகுதியைக் கிழித்துக்கொண்டு பயணிகள் மீது பாய்ந்தது. இதில் பயணி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த இரு பயணிகள் மீட்கப்பட்டு, பாட்னா மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கிழக்கு மத்திய ரயில்வே தலைமை செயலர் ராஜேஷ் குமார், “இந்த சம்பவம் கிளர்ச்சியால் தாக்கப்பட்ட ஒரு பகுதியில் நடந்துள்ளது. நாசவேலை காரணமாக இது நடந்திருக்கலாம். ஏனெனில், 600 கிலோ எடையுள்ள ரயில்வே தண்டவாளம், தரை மட்டத்திலிருந்து 2 மீட்டர் உயரம் வரை பறந்து வருவது அசாதாரணமானது. மூத்த ரயில்வே அதிகாரிகள், போலீஸாருடன் இணைந்து சம்பவ இடத்திலேயே விசாரணை நடத்திவருகின்றனர்”எனத் தெரிவித்துள்ளார். .
2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம், பூரியிலிருந்து ஹரித்வாரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த உத்கல் விரைவு ரயில் கத்தோலி என்ற இடத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.. இந்த விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர். 85 பேர் காயமடைந்தனர்.