இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் தோழிகளே. மகிழ்ச்சியும் வெற்றிகளையும் தரும் ஆண்டாக இந்த வருடம் அமையட்டும். இன்றைய ஸ்பெஷலாக அனைவரும் சர்க்கரைப் பொங்கல்தான் செய்வீர்கள் என்று தெரியும். அதிலும் நாம் ஸ்பெஷலாக வரகு சர்க்கரைப் பொங்கல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை:
வரகரிசி - 1 கப்
பயத்தபருப்பு - 1 மேசைக்கரண்டி
பொடித்த வெல்லம் - 1 கப்
நெய் - கால் கப்
பால் - அரை கப்
ஜாதிக்காய் - 1 துண்டு
குங்குமப்பூ - சிறிதளவு
ஏலக்காய் - 4
முந்திரிப்பருப்பு - 10
கேசரிப்பவுடர் - சிறிதளவு
செய்முறை:
ஒரு வாணலியை எடுத்து, பயத்தம்பருப்பை எண்ணெய் விடாமல் பொன்னிறமாக வறுக்கவும்.
வரகரிசியைச் சிறிது நெய்யில் நன்றாக வறுக்கவும்.
வெல்லத்தை அரை கப் தண்ணீரில் அடுப்பில் வைத்துக் கரையவிட்டு வடிகட்டவும்.
குக்கரில் வைக்கும் ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் வறுத்த பயத்தம்பருப்பு, வறுத்த வரகரிசி, நான்கு கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து (ஐந்து விசில் விட்டு) எடுக்கவும்.
குக்கரில் இருந்து எடுத்து ரெடியாக உள்ள வடிகட்டிய வெல்லத்தைச் சேர்த்துக் கிளறவும். வரகரிசியும் வெல்லமும் ஒன்று சேர்ந்து சர்க்கரைப் பொங்கல் பக்குவம் வரும்.
ஒரு கிண்ணத்தில் பாலை எடுத்துக்கொண்டு அதில் கேசரிப்பவுடர், குங்குமப்பூ, ஏலக்காய் போடவும். ஜாதிக்காய் துண்டை நெய்யில் வறுத்துப் பொடிசெய்து அதையும் பாலில் சேர்த்துக் கரைத்துப் பொங்கலில் சேர்க்கவும். மீதமுள்ள பாலையும் பொங்கலில் சேர்க்கவும். முந்திரிப்பருப்பை நெய்யில் வறுத்துச் சேர்க்கவும். மீதியுள்ள நெய்யை உருக்கி பொங்கலில் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.
கீர்த்தனா சிந்தனைகள்
தை மாதம் நம்ம சூரியனுக்குப் பொங்கல் வைக்கிறோம். ஆனா, பங்குனி மற்றும் சித்திரை மாசத்துல சூரியன்தான் நமக்குப் பொங்கல் வைக்குது. முடியலட சாமி... வெயிலு!