நகை மற்றும் ரத்தினங்கள் துறையினருக்கு இந்திய வங்கிகள் கடன் வழங்க மறுப்பதாக அத்துறையினர் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கியில் சமீபத்தில் வைர வியாபாரி நீரவ் மோடி ரூ.13,700 கோடிக்கு மேல் மோசடி செய்ததில் வங்கித் துறை பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. ஏற்கெனவே வாராக் கடன் பிரச்சினைகளால் நொடிந்து போயுள்ள வங்கிகளுக்கு இதுபோன்ற போலி ஆவணங்களைக் கொண்டு நிதி மோசடி செய்யும் சம்பவங்கள் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன. நிதி மோசடியில் சிக்கிய நீரவ் மோடி போலியான நகைகளை விற்பனை செய்ததாகவும் கூறப்படுகிறது. எனவே நகை வாங்கும் மக்களிடையேயும் தயக்கம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற காரணங்களால் நகை மற்றும் ரத்தினங்கள் துறையினருக்கு வங்கிகள் கடன் வழங்கத் தயங்குகின்றன.
இதுகுறித்து நகை மற்றும் ரத்தினங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் அமைப்பின் பிராந்தியத் தலைவரான தினேஷ் நவாடியா, டிஎன்ஏ இந்தியா ஊடகத்திடம் பேசுகையில், “கடந்த சில வாரங்களாகவே என்னிடம் டஜன் கணக்கான புகார்கள் வந்துள்ளன. சிறு குறு நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் வழங்க மறுக்கின்றன. பெரு நிறுவனங்கள் வங்கிகளிடம் கடன் வாங்கி மோசடி செய்து விட்டால் அவ்வங்கிகள் கடன் வழங்குவதையே நிறுத்த வேண்டிய அவசியம் இல்லையே. இந்த விவகாரத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சி.ஆர்.பாட்டிலுக்குக் கடிதம் அனுப்பியுள்ளேன். இதற்குச் சரியான தீர்வு தேவை” என்று தெரிவித்துள்ளார்.
சூரத் நகரை மையமாகக் கொண்டு இயங்கும் டிஃபைன் ஜூவல்லரி நிறுவனத்தின் உரிமையாளரான ஜெயந்திபாய் சவாலியா கூறுகையில், “முத்ரா கடன் திட்டத்தின் கீழ் கடன் பெறுவதற்கான அனைத்து ஒப்புதலையும் பெற்று வங்கியில் ரூ.10 லட்சம் கடன் வாங்க விண்ணப்பித்தேன். ஆனால் பொதுத் துறை வங்கி ஒன்று எனது விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டது. புதிய இயந்திரம் வாங்க எனக்குப் பணம் தேவை. பணம் கிடைத்தால்தான் அந்த இயந்திரத்தை என்னால் இத்தாலியிலிருந்து இறக்குமதி செய்ய முடியும்” என்று கவலை தெரிவித்துள்ளார்.