மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 28 செப் 2020

வைகோ மருமகன் மறைவு: ஸ்டாலின் ஆறுதல்!

வைகோ மருமகன் மறைவு: ஸ்டாலின் ஆறுதல்!

விருதுநகரில் வைகோவின் மருமகன் சரவண சுரேஷ் நேற்று தீக்குளித்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மருமகன் சரவண சுரேஷ், நேற்று அதிகாலை நடைபயிற்சி செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றவர், விருதுநகர் மாவட்டம் சூலக்கரையில் கையில் வைத்திருந்த பெட்ரோலை ஊற்றித் தீ வைத்துக்கொண்டார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் வலியுறுத்தி அவர் தீக்குளித்ததாகவும் கூறப்பட்டது.

இதையடுத்து முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு மேல் சிகிச்சைக்காக உடனே மதுரை அப்பல்லோ மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார் சரவண சுரேஷ். தகவலறிந்தவுடன் மதுரை விரைந்த வைகோ, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மருமகன் சரவண சுரேஷைக் கண்டு கதறி அழுதார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வைகோ, "ஸ்டெர்லைட் ஆலையில் என் மகன் வையாபுரிக்குப் பங்கு வாங்கிவிட்டதாகக் கூறி என் மீது நாம் தமிழர் கட்சியினர் அவதூறு பரப்பியதால் மன வேதனை தாங்க முடியாமல் என் மருமகன் சரவண சுரேஷ் தீக்குளித்துவிட்டான்" என்று அழுதபடியே கூறினார்.

இந்த நிலையில் வைகோ மருமகன் சரவண சுரேஷ் இன்று மதியம் சிகிச்சை பலனளிக்காமல் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்குப் பிறகு சரவண சுரேஷின் உடல் பொதுமக்கள் மரியாதைக்காகக் கோவில்பட்டி அருகேயுள்ள அவரது சொந்த ஊரான பெருமாள் பட்டிக்குக் கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

சரவண சுரேஷ் மறைவுக்கு ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தித் தீக்குளித்த. விருதுநகரைச் சேர்ந்தவரும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மருமகனுமான சரவணன் சுரேஷ் அவர்கள், இறந்துள்ள செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். வைகோவுக்கும், அவரது குடும்பத்திற்கும் ஆறுதல் கூறும் அதே நேரத்தில், சரவணன் சுரேஷ் மறைவு என்னை மீளாத் துயரத்தில் ஆழ்த்திவிட்டது. தமிழக நலனுக்காகத் தன் இன்னுயிரைத் தியாகம் செய்துள்ள இந்த நிகழ்வு, காவிரிப் பிரச்னை தமிழினத்தின் உயிரோடு கலந்திருப்பதை மீண்டும் அனைவருக்கும் உணர்த்துகிறது. ஆனாலும், இதுபோன்ற தியாகங்களில் இளைஞர்கள் ஈடுபட வேண்டாம் என்று நானும் வைகோவும் தொடர்ந்து வலியுறுத்திவருகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,"தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு இளைஞரும் மாநில நலன் காக்கவும், மண்ணின் உரிமைகளை நிலைநாட்டவும் நடைபெறும் அறவழிப் போராட்டங்களுக்கு எப்போதும் தேவை என்பதால், ஜனநாயக ரீதியிலான போராட்டங்களில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற தீக்குளிப்பு சம்பவங்களில் நிச்சயமாக ஈடுபட வேண்டாம் என்றும் மீண்டும் இரு கரம் கூப்பிக் கேட்டுக்கொள்கிறேன்" என்று வேண்டுகோளும் விடுத்தார்.

மேலும் சரவண சுரேஷ் மறைவு செய்தியறிந்தவுடன் வைகோவை போனில் தொடர்புகொண்ட ஸ்டாலின், அவருக்கு ஆறுதல் கூறி தேற்றியுள்ளாராம்.

சனி, 14 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon