மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 22 செப் 2020

மோதல் : நீதிபதிகளைச் சந்தித்த தலைமை நீதிபதி!

மோதல் : நீதிபதிகளைச் சந்தித்த தலைமை நீதிபதி!

இரண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகள் குறித்த கொலீஜியத்தின் பரிந்துரையை ஏற்காமல் மத்திய அரசு தாமதித்துவருவது தொடர்பாக, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு நீதிபதி குரியன் ஜோசப் எழுதிய கடிதம் இரண்டு நாட்களுக்கு முன்பாக வெளியானது. இந்த நிலையில், நீதிபதிகள் குரியன் ஜோசப் மற்றும் ரஞ்சன் கோகாய் இருவரையும் அதிகாரபூர்வமற்ற முறையில் தீபக் மிஸ்ரா சந்தித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த ஜனவரி 12ஆம் தேதியன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செலமேஸ்வர், மதன் பி லோகூர், ரஞ்சன் கோகாய் மற்றும் குரியன் ஜோசப் ஆகியோர் டெல்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். உச்ச நீதிமன்றச் செயல்பாடுகளில் இவர்கள் அதிருப்தி தெரிவித்தது, இந்திய நீதிமன்ற வரலாற்றில் முக்கியமானதாகக் கருதப்பட்டது. அவர்கள் குறிப்பிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாக, அப்போது உறுதியளித்தார் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா.

இந்த 4 நீதிபதிகளில், ரஞ்சன் கோகாய் மற்றும் குரியன் ஜோசப் இருவரும் நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும் கொலீஜியம் அமைப்பில் இருந்துவருகின்றனர். மூன்று மாதங்களுக்கு முன்பாக, இரண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகள் குறித்த பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பியது கொலீஜியம். இதுகுறித்துப் பதிலளிக்காமல் தாமதிப்பதாகக் குற்றம்சாட்டி, ஏப்ரல் 9ஆம் தேதியன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்குக் கடிதம் எழுதினார் நீதிபதி குரியன் ஜோசப். மத்திய அரசின் அழுத்தத்தை உச்ச நீதிமன்றம் ஏற்கக் கூடாது என்றும், அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக, கடந்த புதன்கிழமையன்று (ஏப்ரல் 11) நீதிபதிகள் குரியன் ஜோசப் மற்றும் ரஞ்சன் கோகாய் இருவரையும் சந்தித்துப் பேசியுள்ளார் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா. உச்ச நீதிமன்ற வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட உடற்பயிற்சி நிலையத் திறப்பு விழாவில் அவர் கலந்துகொண்டபோது இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தச் சந்திப்பு சுமார் அரை மணிநேரம் நடந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, லோக்பால் தேர்வுக் குழு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியுடன் விவாதித்தது பற்றி, இருவருடனும் தீபக் மிஸ்ரா பேசியுள்ளார். மேலும், நீதிபதிகள் நியமனம் குறித்தும் பேசித் தீர்ப்பதாக அவர்களிடம் உறுதியளித்துள்ளார்.

குரியன் ஜோசப் போலவே, நீதிபதி செலமேஸ்வரும் கொலீஜியம் பரிந்துரை குறித்து தீபக் மிஸ்ராவுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக, இதுவரை தலைமை நீதிபதி தரப்பிலிருந்து அதிகாரபூர்வமாகக் கருத்து ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

சனி, 14 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon