மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 28 நவ 2020

எஸ்சி/எஸ்டி சட்டத் திருத்தம்: அவசரச் சட்டம் வருமா?

எஸ்சி/எஸ்டி சட்டத் திருத்தம்: அவசரச் சட்டம் வருமா?

தலித்துகள் பாதுகாப்புச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் சமீபத்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு திரும்பப்பெறப்படும் என்று நம்புவதாகவும், அவ்வாறு திரும்பப்பெறாவிட்டால் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் மாற்றம் ஏற்படாமல் இருக்க அவசரச் சட்டம் கொண்டுவரப்படும் என்றும் இரண்டு மத்திய அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

லோக் ஜனசக்தி கட்சியின் தலைவரும், மத்திய உணவு மற்றும் நுகர்வோர் நலத் துறை அமைச்சருமான ராம் விலாஸ் பாஸ்வான், உச்ச நீதிமன்றத்தின் எஸ்சி/எஸ்டி சட்டத் திருத்தத் தீர்ப்பைத் திரும்பப் பெற்றுக்கொள்ளும் என்று அரசாங்கம் நம்புவதாக நேற்று (ஏப்ரல் 13) கூறியுள்ளார்.

“எஸ்சி/எஸ்டி சட்டம் ஒரு சிறப்பான சட்டமாகும். இது சிறப்பான சட்டம் என்பதை உச்ச நீதிமன்றமும் கவனத்தில் கொள்ளும் என்பதை நம்புகிறோம். சட்டம் இயற்றப்பட்டது போலவே சட்டத்தின் நிலையை உறுதியாகக் கடைப்பிடிப்போம். அல்லது அவசரச் சட்டம் கொண்டுவர வேண்டுமென்றால், அதுவும் நிறைவேற்றப்படும்” என்று பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

பெயர் குறிப்பிட விரும்பாத மற்றொரு அமைச்சர் “இது சம்பந்தமாகத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். மார்ச் 20ஆம் தேதி அளிக்கப்பட்ட விசாரணையின்போது மத்திய அரசு தனது கருத்துகளைத் திறம்பட மற்றும் தெளிவாகக் கூறவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி இந்த விவகாரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏப்ரல் 2ஆம் தேதி நாடு தழுவிய தலித் ஆர்ப்பாட்டங்களைத் தூண்டிய மார்ச் 20ஆம் தேதி தீர்ப்பிற்கு எதிராக அரசு தாக்கல் செய்த மறுபரிசீலனை மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த பிறகு சட்டரீதியான அனைத்து அம்சங்களும் ஆராயப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனி, 14 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon