இசையமைப்பாளராகும் சுசீலா

டாக்டர் எஸ்.அனிதா எம்.பி.பி.எஸ்.படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் பின்னணிப் பாடகி பி.சுசீலா .
மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் போனதற்காகக் கடந்த வருடம் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் வாழ்க்கை தற்போது படமாகிவருகிறது. இதில் அனிதா கதாபாத்திரத்தில் பிக் பாஸ் ஜூலி நடித்துவருகிறார். ஆர்.ஜே.பிக்சர்ஸ் மற்றும் ரன் ஸ்டுடியோ இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு டாக்டர் எஸ்.அனிதா எம்.பி.பி.எஸ். என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. உத்தமி என்கிற படத்தில் நடித்துவரும் ஜூலி கதாநாயகியாக நடித்துவரும் நிலையில் இது ஜூலியின் இரண்டாவது படமாகும்.
எஸ்.அஜய் இயக்கும் இப்படத்தில் அனிதாவின் தந்தையாக நடிகர் ராஜ கணபதி நடிக்கிறார். எஸ்.மோகன் ஒளிப்பதிவு செய்கிறார். பின்னணிப் பாடகி பி.சுசீலா இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் . தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனப் பல மொழிகளில் இதுவரை 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ள இவர் பல மத்திய, மாநில அரசு விருதுகளைப் பெற்றுள்ளார். தொடர்ந்து 4ஆவது தலைமுறைக்கும் பாடிக்கொண்டிருக்கும் பி.சுசீலா முதன் முறையாக டாக்டர் எஸ்.அனிதா எம்.பி.பி.எஸ் படத்துக்கு இசை அமைக்கிறார்.