மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 24 நவ 2020

ஏர் இந்தியா விற்பனை: பைலட்டுகள் எதிர்ப்பு!

ஏர் இந்தியா விற்பனை: பைலட்டுகள் எதிர்ப்பு!

ஏர் இந்தியாவின் பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்வது தொடர்பாக, பைலட் சங்கத்துடனான பேச்சுவார்த்தைக்கு ஏர் இந்தியா நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

இந்திய பொதுத் துறை விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா சுமார் ரூ.50,000 கோடிக்கும் மேல் கடனில் சிக்கித் தவிக்கிறது. இதனால் இந்நிறுவனத்தின் 75 சதவிகிதப் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஏர் இந்தியாவைத் தனியார்மயமாக்க பைலட் சங்கங்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இதுகுறித்து நான்கு பைலட் சங்க நிர்வாகிகளுடன் ஏர் இந்தியா தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பிரதீப் சிங் கரோலா பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் ஏர் இந்தியாவைத் தனியார்மயமாக்குவது குறித்தும், தற்போது நிலவும் சிக்கல்கள் குறித்தும் பேசியுள்ளார்.

இந்தச் சந்திப்பையடுத்து அடுத்த வாரத்தில் இதுகுறித்து விரிவாக ஆலோசனை நடத்தி முடிவெடுக்க பைலட் சங்கங்களுக்கு ஏர் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், "ஏர் இந்தியா தனியார்மயமாக்கல் குறித்து பேச்சுவார்த்தை நடத்த பைலட் சங்கங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்தக் கூட்டம் ஏப்ரல் 17ஆம் தேதியன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்று கூறியுள்ளது.

1,400 உறுப்பினர்கள் வரை கொண்டுள்ள ஐ.பி.ஜி. மற்றும் ஐ.சி.பி.ஏ. பைலட் சங்கங்கள் ஏர் இந்தியா தனியார் மயமாக்கப்பட்டால் நிலுவைத் தொகைகள் எளிதில் வழங்கப்பட்டுவிடும் என்ற அடிப்படையில் மத்திய அரசின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. எஞ்சிய 11 பைலட் சங்கங்கள் ஏர் இந்தியாவின் தனியார்மயமாக்கல் முடிவுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டுள்ளன. இதனால் எஞ்சிய பைலட் சங்கங்களின் ஆதரவையும் பெறும் முயற்சியில் ஏர் இந்தியா நிர்வாகம் இந்தக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

சனி, 14 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon