மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 5 ஜூலை 2020

புகைமண்டலமான சிரியா!

புகைமண்டலமான சிரியா!

சிரியா மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகள் நேற்று இரவு முதல் தாக்குதல் நடத்திவருகின்றன.

அதிபர் பஷார் அல் அசாத் தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவரும் சிரியாவில் உள்நாட்டுப் போர் நடந்துவருகிறது. சிரிய அதிபருக்கு எதிர்ப்புத் தெரிவித்து கிளர்ச்சியாளர்கள் போரிட்டுவருகின்றனர். ஐஎஸ்ஐஎஸ் போன்ற தீவிரவாத அமைப்புகளும் தாக்குதலில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதனால் லட்சக்கணக்கான பொதுமக்கள் வன்முறைக்குப் பலியாகியுள்ளனர். கடந்த 7ஆம் தேதி அந்நாட்டின் தலைநகர் டமாஸ்கஸ் அருகே கிழக்கு கூட்டா பகுதியில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள டூமா நகரைக் கைப்பற்ற ரஷ்ய ஆதரவு சிரிய அரசுப் படைகள் முற்றுகையிட்டன.

அப்போது நடைபெற்ற ரசாயனத் தாக்குதலில் 70 பேர் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தத் தாக்குதலில் விஷவாயுக்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில் சிரியாவுக்கு ஆதரவாக செயல்படும் ரஷ்யா ரசாயனத் தாக்குதலைத் தடுக்கவில்லை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டியிருந்தார்.

“சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் தயாரித்து பதுக்கப்படுகின்றன. அவற்றை முற்றிலும் அழிக்கும் வரை அமெரிக்க ராணுவம் சிரிய அதிபருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தும்” என்று நேற்று (ஏப்ரல் 13) ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

அதாவது சிரியா மீது அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் வான்வழித் தாக்குதலை நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், குழந்தைகளையும் அப்பாவி மக்களையும் விஷ வாயு மூலம் கொன்ற சிரிய அரசின் பின்புலமாக ரஷியாவும் ஈரானும் இருக்கின்றன என்று குற்றம் சாட்டியதுடன், சிரியாவுக்கு எதிராக நடத்தும் தாக்குதலில் இரு நாட்டு அரசுகளும் தலையிடக் கூடாது என்று ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.

அமெரிக்கா தலைமையிலான தாக்குதலில் தங்களது ராணுவமும் பங்கேற்கும் என்று பிரிட்டன் பிரதமர் தெரசா மே தெரிவித்திருந்தார். ராணுவத்தைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி, நள்ளிரவு முதல் தாக்குதல்கள் நடைபெற்றுவருகின்றன. டமாஸ்கஸ், ஹோம்ஸ் மாகாணங்களில் ரசாயன ஆயுதங்கள் குவித்துவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இடங்கள், சிரியாவின் ஆயுதக் கிடங்குகள் மற்றும் ராணுவ முகாம்களைக் குறிவைத்து குண்டுமழை பொழிந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால் அப்பகுதிகள் புகைமண்டங்களாகக் காட்சியளிப்பதாகவும் சிரிய அரசு தெரிவித்துள்ளது.

சனி, 14 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon