மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 25 செப் 2020

றெக்கை: சிறுவர்கள் கொண்டாடப் புது வரவு!

றெக்கை: சிறுவர்கள் கொண்டாடப் புது வரவு!

சிறுவர்களுக்கான மாத இதழோ, வார இதழோ தமிழில் அதிகப்படியாக இல்லை. சுட்டி விகடன், மின்மினி, துளிர் என்று விரல்விட்டு எண்ணிச் சொல்லும் அளவிலேயே இருக்கின்றன. இந்த நிலையில் புதிதாக வந்திருக்கும் ‘றெக்கை’ சிறுவர்களுக்கான கொண்டாட்டமாகத் தன் சிறகை விரித்துள்ளது.

சுட்டி விகடன், தி இந்து தமிழ் ஆகிய நிறுவனங்களில் பணிபுரிந்த சரா சுப்ரமணியம் இந்தப் புதிய முயற்சியைச் செய்துவருகிறார். இந்த இதழ் சிறுவர்களுக்கு வெறும் தகவல்களைத் தரும் இதழாக இல்லாமல் அவர்களின் படைப்புத் திறனை வெளிக்கொண்டுவரும் விதத்தில் செயல்படுகிறது. சிறுவர்களை வாசகர்கள் அல்லது பார்வையாளர்களாக மட்டும் குறுக்கிவிடாமல் அவர்களைப் படைப்பாளிகளாக வெளிச்சப்படுத்தும் முயற்சியை முன்னெடுக்கிறது.

கடந்த பிப்ரவரியிலிருந்து வரும் இந்த மாத இதழின் முதல் இதழிலேயே பல சிறுவர்கள் பங்களித்திருக்கிறார்கள். வண்ணமயமான வழுவழு தாள்களில் குழந்தைகள் படிப்பதற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதிகமான பக்கங்களைத் தந்து சிறுவர்களுக்குச் சோர்வு ஏற்படுத்தாமல் சிக்கனமாக 50 பக்கங்களைக் கொண்டுள்ளது ‘றெக்கை’.

சிறுகதை, விளையாட்டு, கலை, இலக்கியம், சினிமா, சாதனை, படக்கதை, ஓவியப் பயிற்சி, காலண்டர், சூழலியல், விடுகதை, என்சைக்ளோபீடியா என பல்வேறு வித்தியாசமான தலைப்புகளில் படைப்புகள் நிரம்பியிருக்கின்றன.

சிறார் இலக்கிய எழுத்தாளர்கள்

தமிழ் எழுத்துலகில் சிறார் இலக்கிய எழுத்தாளர்கள் விரல்விட்டு எண்ணிச் சொல்லும்படியாகவே இருக்கின்றனர். அப்படி சிறுவருக்கான படைப்பாக்கங்களை எழுதுபவர்கள் யார் என்பது பலருக்கும் தெரிவதில்லை. இந்த இதழில் சிறார் நூல்கள் எழுதும் ஆசிரியர்களை அறிமுகம் செய்யும் பகுதி இருக்கிறது.

உதாரணமாக, சிறார் நூல்களை மொழியாக்கம் செய்து தமிழுக்கு அளித்து வருபவர்களில் ஒருவர் எழுத்தாளர் யூமா.வாசுகி. அவரைப் பற்றிய அறிமுகம் முதல் இதழில் உள்ளது. இதேபோன்று ஒவ்வோர் இதழிலும் இப்படி சிறார் இலக்கிய எழுத்தாளர்களை அறிமுகம் செய்துவருகின்றனர்.

வழிகாட்டி வடிவேலு

வடிவேலு ஆசிரியர் பதவியிலிருந்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினால் எப்படி இருக்கும். அப்படியான ஒரு பகுதிதான் வழிகாட்டி வடிவேலு. ஒவ்வொரு மாதமும் புதுமையான கதை உருவாக்கத்தில் வடிவேலுவின் மொழியில் வெளிவரும் இந்தப் பகுதி சிறார்களைக் கவரும்.

சிறார் புத்தக அறிமுகம்

பென்சில்களின் அட்டகாசம், குட்டி இளவரசன், குட்டித் தாத்தா இவை போன்று பல சிறார் நூல்களை அறிமுகம் செய்துவைக்கும் பகுதி இருக்கிறது. புத்தகம் பற்றிய குறிப்புகள் அந்தப் புத்தகங்களை வாசிக்கத் தூண்டும்விதமாக உள்ளன.

பிறந்த நாள் காலண்டர்

பிரபலங்களின் பிறந்த நாள்கள் குறித்த தகவல்கள் அடங்கிய அழகிய காலண்டர் நடுப்பக்கங்களை அலங்கரிக்கிறது. அதில் இடம்பெற்றுள்ள பிரபலங்கள் எந்தத் துறை சார்ந்தவர்கள், எந்த நாட்டைச் சார்ந்தவர்கள் என்கிற விவரம் எல்லாம் இருக்கின்றன.

வண்ணக் காகிதங்களைக்கொண்டு கப்பல், பறவை போன்ற பலவற்றைச் செய்ய கற்றுத்தரும் ஓரிகாமி பகுதி, ஓவியம் வரைவதற்கு எளிமையான படிநிலைகளை விவரிக்கும் ஓவியப் பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பகுதி, மூளைக்கான பயிற்சி என்று பல பகுதிகளும் றெக்கைக்கு அற்புதமான வண்ணங்களைச் சேர்க்கின்றன.

திரைப்படமும் கதைப்படமும்

சிறுவர் சினிமா ஒன்றைத் தேர்வு செய்து அந்தப் படத்தின் கதையைப் படங்களின் மூலம் விவரிக்கும் பகுதி இருக்கிறது. முதல் மாத இதழில் அமிதாப் பச்சன் நடித்த ‘பூத்நாத் ரிட்டன்ஸ்’ படத்தை விவரித்திருந்தார்கள். இரண்டாம் மாத இதழில் ‘அவர்களும் அவனும்’ படத்தில் சிறுவர்களுக்கு அறிவுரை சொல்வதற்கான காட்சியைப் பயன்படுத்தி விளக்கியிருக்கிறார்கள்.

சிறுவர்களின் திறமையை வெளிப்படுத்தும் பகுதி

சிறுவர்களின் கதை, கவிதை, கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட படைப்புகளை அச்சு எழுத்தில் வெளிப்படுத்தும் பத்திரிகைகளுக்கு மத்தியில் சிறுவர்களின் படைப்புகளை அவர்களின் கையெழுத்திலும், அவர்களின் கைவண்ணத்திலும் அப்படியே வெளியிட்டிருப்பது புதுமையான ஒன்று.

இந்தப் பகுதியின் முதல் முயற்சியாகச் சென்னை நல்லம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இந்த முயற்சியையும் அந்தப் பள்ளி மாணவர்களையே செய்ய வைத்திருக்கிறார்கள்.

இப்படி ஒரு முயற்சியை மேற்கொண்டிருக்கும் றெக்கை இதழின் ஆசிரியர் சராவிடம் பேசியபோது, “மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக மாவட்டம்தோறும் பள்ளிகளில் முகாமிட்டு அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவரும் ஒரு பகுதியைத் தொடங்கினோம். அப்படித் தொடங்கிய முதல்முயற்சியே வெற்றியாக அமைந்திருக்கிறது. இந்தப் பகுதிக்கு பல தரப்பினரும் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர். பத்திரிகைக்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது” என்றார்.

இன்றைய சிறுவர்களின் உலகம் மின்னணுக் கருவிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அவர்களின் சிந்தனைகளை மழுங்கடிக்கக்கூடிய சூழல் அதிகரித்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில் சிறுவர்களின் வாசிப்புக்கும் படைப்பூக்கத்துக்கும் துணைபுரியும் முயற்சியைத் தொடங்கியிருக்கிறது 'றெக்கை'.

மொத்தத்தில், ‘றெக்கை சிறார் கலகல மாத இதழ்’, சிறுவர்கள் விரும்பி வாசிக்கவும் கண்டு ரசிக்கவும் ஏற்ற வகையில் உருவாகியுள்ளது.

(றெக்கை - சிறார் கலகல மாத இதழ்; விலை ரூ. 40; பக்கங்கள் 50; ஆசிரியர்: சரா சுப்ரமணியம்; 13, இரண்டாவது தளம், முதல் குறுக்குத் தெரு, கே.பி.நகர், ராமாபுரம், சென்னை – 89. தொடர்புக்கு: 9884208075)

சனி, 14 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon