மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

மறைந்தார் மக்களின் மேயர்!

மறைந்தார் மக்களின் மேயர்!

திமுகவின் முன்னோடிகளில் ஒருவரும் சென்னை மாநகர முன்னாள் மேயருமான சா.கணேசன் உடல்நலக் குறைவால் நேற்று சென்னையில் மறைந்தார். அவருக்கு வயது 89. கணேசனுக்கு அழகிரி, அண்ணாதுரை ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

இளம் வயதிலிருந்தே திராவிடக் கொள்கைகளில் ஈடுபாட்டுடன் இருந்துவந்த கணேசன், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டோரோடு நெருங்கிப் பழகியவர். திமுக முன்னெடுத்த அனைத்துப் போராட்டங்களிலும் கலந்துகொண்டவர். திமுகவில் தலைமை அலுவலகச் செயலாளராகவும், செய்தித் தொடர்புச் செயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.

1970ஆம் ஆண்டு சென்னை மாநகர மேயராக கணேசன் பதவி வகித்துவந்த காலத்தில்தான், சென்னை மாநகராட்சி கூட்டத்தில் வங்கதேசம் தனிநாடாக உருவாக மத்திய அரசு உதவ முன்வர வேண்டும், காவிரி நீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1989ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் தி.நகர் தொகுதி எம்.எல்.ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பணியாற்றினார்.

மாநகர மேயர், சட்டமன்ற உறுப்பினர் என்ற பதவிகளில் வகித்தாலும் சைக்கிளில் வந்து சென்று மக்களோடு மக்களாய், எளிமையின் சின்னமாய்த் திகழ்ந்தவர் சா.கணேசன். திராவிட இயக்கங்களின் கூட்டம் எந்த அரங்கில் நடந்தாலும், அங்கே சா.கணேசனை நாம் பார்க்கலாம். தேடித் தேடிக் கூட்டங்களுக்குச் சென்று திராவிட இயக்கத்தின் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு ஊக்கம் அளித்தவர் சா.கணேசன்.

பொதுமக்கள் அஞ்சலிக்காக வளசரவாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த சா.கணேசன் உடலுக்கு திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன், செயல்தலைவர் ஸ்டாலின், மகளிரணிச் செயலாளர் கனிமொழி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

கணேசன் மறைவுக்கு ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், குறைகளை நேரில் அறிந்து உடனுக்குடன் தீர்த்துவைத்து மக்கள் மேயர் எனப் பெயர் பெற்றவர் சா.கணேசன் என்று குறிப்பிட்டுள்ளார்.

சா.கணேசன் இறுதி ஊர்வலத்தில் ஸ்டாலின், திருமாவளவன், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, ஜெ.அன்பழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சனி, 14 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon