மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 14 ஜூலை 2020

விருந்தோம்பல்: தேடிவரும் வெளிநாட்டினர்!

விருந்தோம்பல்:  தேடிவரும் வெளிநாட்டினர்!

சென்ற மார்ச் மாதத்தில் இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 13 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது.

இது குறித்து இந்திய சுற்றுலா அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’2017ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் இந்தியாவுக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 9.05 லட்சமாக இருந்த நிலையில் 2018ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் இந்த எண்ணிக்கை 13.4 சதவிகித உயர்வுடன் 10.26 லட்சமாக அதிகரித்துள்ளது. அதேபோல, ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாதங்களில் இந்தியாவுக்கு மொத்தம் 31.27 லட்சம் பேர் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ளனர். 2017ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 28.45 லட்சமாக மட்டுமே இருந்தது. இந்த மூன்று மாதங்களில் 13.4 சதவிகித வளர்ச்சி கிட்டியுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

இ-விசாக்கள் வாயிலாக இந்தியாவில் சுற்றுலாப் பயணத்தை எளிமையாக்கியுள்ள இந்தியா, உள்நாட்டிலும் விமானச் சேவைகளைப் பலப்படுத்தியுள்ளது. விருந்தோம்பல் பண்பிலும் இந்தியா சிறந்து விளங்குவதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் சுற்றுலாத் துறையில் கணிசமான வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்திய சுற்றுலாத் துறையில் தற்போது 4.29 கோடி பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கை வருகிற 2028ஆம் ஆண்டில் 5.23 கோடியாக அதிகரிக்கும் என்று உலக பயணம் மற்றும் சுற்றுலா கவுன்சில் சமீபத்தில் வெளியிட்டிருந்த தனது ஆய்வறிக்கையில் தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

சனி, 14 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon