மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 26 மே 2020

அறிவித்ததைச் செய்யவும்!

அறிவித்ததைச் செய்யவும்!

வேளாண் விளைபொருட்களுக்கு 1.5 மடங்கு கூடுதல் விலை நிர்ணயம் செய்யப்படும் என்ற மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்பிலிருந்து பின்வாங்கக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையைக் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் விவசாயிகளை கவரும் விதமாக வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை 1.5மடங்கு உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்தத் திட்டத்திலிருந்து மத்திய அரசு பின்வாங்க கூடாது என்று குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (ஏப்ரல் 14) வெளியிட்டுள்ளார். அதில்,கடந்த பிப்ரவரி மாதம் முதல் நாளன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பொது நிதிநிலை அறிக்கையில் அனைத்து வேளாண் விளைபொருட்களுக்கும் கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படும்; கொள்முதல் விலை உற்பத்தி செலவை விட 50% கூடுதலாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு 50 நாட்களாகியும் அதற்கான செயல்திட்டம் இன்று வரை அறிவிக்கப்படவில்லை" என்று குற்றம் சாட்டியுள்ளார்.

"விளைபொருட்களுக்கு கூடுதல் கொள்முதல் விலை வழங்குவதற்கான செயல்திட்டத்தை உருவாக்கும் பொறுப்பு நிதி ஆயோக்கிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஆனால், நிதி ஆயோக் உறுப்பினர்களிடையே இது தொடர்பாக கருத்தொற்றுமை ஏற்படாததால் செயல்திட்டம் இன்று வரை உருவாக்கப்படவில்லை" என்ற தகவலையும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ராமதாஸ், "கூடுதல் கொள்முதல் விலை வழங்கும் திட்டத்தை குழி தோண்டி புதைக்க நிதி ஆயோக் சதி செய்கிறது.‘‘வேளாண் விளைபொருட்களுக்கு அதன் உற்பத்திச் செலவுடன் 50% லாபம் சேர்த்து வழங்கினால் விவசாயிகள் பயனடைவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், உணவுப் பொருட்களுக்கு கூடுதல் விலை வழங்குவதால் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயரும்; அதனால் பணவீக்கம் அதிகரிக்கும். அது நாட்டின் வளர்ச்சியைப் பெரிதும் பாதிக்கும்’’ என்று நிதி ஆயோக் கூறியுள்ளது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "இக்காரணங்களைக் கூறி கூடுதல் கொள்முதல் விலை வழங்குவதை ஒத்திவைக்கும்படி மத்திய அரசை நிதி ஆயோக் வலியுறுத்தியிருப்பதாகத் தெரிகிறது. கூடுதல் கொள்முதல் விலை வழங்கினால் பணவீக்கம் அதிகரிக்கும் என்பதோ, கட்டமைப்பு வசதிகள் குறைவாக இருக்கும் என்பதோ மத்திய அரசுக்குத் தெரியாததல்ல. இவற்றையெல்லாம் அனுசரித்துக் கூடுதல் கொள்முதல் விலை வழங்க முடியும் என்பதை மத்திய அரசு உணர்ந்திருந்ததால்தான் இத்திட்டத்தை மத்திய நிதி நிலை அறிக்கையில் அறிவித்தது" என்றும் கூறியுள்ளார்.

எனவே, இவற்றைக் காரணம் காட்டி வேளாண் விளைபொருட்களுக்குக் கூடுதல் விலை வழங்க முட்டுக்கட்டை போடும் எந்தப் பரிந்துரையையும் மத்திய அரசு ஏற்கக் கூடாது. வேளாண் விளைபொருட்களுக்கு உற்பத்திச் செலவுடன் 50% லாபம் சேர்த்து கொள்முதல் விலை நிர்ணயிக்கும் முறையை மத்திய அரசு இம்மாத இறுதிக்குள் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். இல்லாவிட்டால் இத்திட்டத்திற்காக மத்திய அரசு செலவழிக்க உள்ள ரூ.25,000 கோடியை மாநில அரசுகளுக்கு வழங்கி கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

சனி, 14 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon