மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 11 ஆக 2020

ராணுவத் தளவாடக் காட்சி: ஏழு ஒப்பந்தங்கள் கையெழுத்து!

ராணுவத் தளவாடக் காட்சி: ஏழு ஒப்பந்தங்கள் கையெழுத்து!

திருவிடந்தையில் நடைபெறும் ராணுவத் தளவாடக் காட்சியில், இந்திய - ரஷ்ய நிறுவனங்களிடையே இடையே ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் ராணுவத் தளவாடங்கள் உற்பத்திக்கான ஏழு ஒப்பந்தங்கள் நேற்று (ஏப்ரல் 13) கையெழுத்தாகின.

காஞ்சிபுரம் மாவட்டம், திருவிடந்தையில் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கிய, ராணுவத் தளவாடக் காட்சி இன்றுடன் (ஏப்ரல் 14) நிறைவடைகிறது. மத்திய அரசின் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ (மேக் இன் இந்தியா) திட்டத்தின் கீழ் ராணுவத் துறைக்குத் தேவையான அனைத்துத் தளவாடப் பொருள்களையும் நம் நாட்டிலேயே தயாரிக்க முடிவு செய்து, இந்த ராணுவத் தளவாடக் காட்சி தற்போது நடைபெறுகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை வெளிநாடுகளில் இருந்துதான் ராணுவ உபகரணங்கள் அதிகமாக இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகத் தொடர்ந்து பத்தாண்டுகளாக ராணுவக் காட்சி நடைபெற்று வருகிறது. ராணுவத் தளவாடங்களைக் காட்சிப்படுத்துவதன் மூலம் 2025ஆம் ஆண்டு ரூ.35 ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காட்சியில் ராணுவத் தளவாடங்கள், பீரங்கிகள், ஏவுகணைகள், போர்க் கப்பல்கள் ஆகியவை தனித்தனியே இடம்பெற்றுள்ளன.

முதன்முறையாக விமானப் படை, கடற்படை, தரைப் படை என முப்படைகளின் இணைந்த காட்சி நிகழ்ச்சி தற்போது தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. ராணுவத் தளவாடக் காட்சியின் ஓர் அங்கமாக இந்திய - ரஷ்யப் பாதுகாப்புத் துறை சார்ந்த கருத்தரங்கு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இரு நாட்டுப் பாதுகாப்புத் துறை அமைச்சகப் பிரதிநிதிகளும் அதிகாரிகளும் இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டனர். ரஷ்யத் தொழில்நுட்பத்துடன் இந்தியாவில் ராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தங்கள் இரு நாட்டு நிறுவனங்களிடையே மேற்கொள்ளப்பட்டன.

இந்திய ராணுவ உற்பத்தித் துறை செயலாளர் அஜய்குமார் மற்றும் ரஷ்யத் தொழில் மற்றும் வர்த்தகத்துறை இணை அமைச்சர் ஒலேக் ரயசான்ட்சேவ் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதைத் தொடர்ந்து தளவாட உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கையெழுத்திட்டனர். ரஷ்யாவில் பாதுகாப்புத் துறைசார் உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்களுடன் இணைந்து கடற்படைக்கான சிறப்பு நடவடிக்கை வாகனங்கள் மற்றும் டர்பீடோ எனப்படும் கப்பல்களைத் தகர்க்கும் வெடிகுண்டுகள் உள்ளிட்டவை தயாரிப்பதற்கான ஒப்பந்தங்களில் எல் அண்ட் டி நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது. இதேபோன்று ரேடார் கருவிகளை மேம்படுத்தும் உபகரணங்கள் தயாரிப்பு உட்பட ஏழு முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன.

இக்காட்சியில் 47 நாடுகள் கலந்துகொண்டிருக்கின்றன. மொத்தம் உள்ள 701 அரங்குகளில், இந்தியாவைச் சேர்ந்த 539 தளவாட உற்பத்தி நிறுவனங்களும் உலக நாடுகளில் உள்ள 162 நிறுவனங்களும் அரங்குகள் அமைத்துள்ளன.

டாடா, எல் அண்ட் டி, கல்யாணி, மஹிந்திரா, எம்.கே.யூ, டி.ஆர்.டி.ஓ, எச்.ஏ.எல், பி.இ.எல், பி.டி.எல், பி.இ.எம்.எல், எம்.டி.எல், ஜி.ஆர்.எஸ்.இ. மிதானி போன்ற ராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்யும் 70 விழுக்காடு பெருநிறுவனங்களும் 15 விழுக்காடு சிறு, குறு நிறுவனங்களும் (MSME - சிறு மற்றும் குறு நிறுவன வளர்ச்சித் துறை) இந்தியாவிலிருந்து கலந்து கொண்டன.

நான்கு நாள்கள் நடைபெறுகின்ற காட்சியின் கடைசி நாளான இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பொது மக்கள் அரங்குகளைப் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து, அடையாள அட்டையுடன் காட்சிக்குச் சென்று ராணுவத் தளவாடங்களைப் பார்வையிடலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இக்காட்சியை பொதுமக்கள் பார்வையிட ஏதுவாக ஏற்கெனவே அந்த வழியாக இயக்கப்படும் 45 வழித்தடப் பேருந்துகளுடன், கூடுதலாக 50 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மேலும், வாகனம் நிறுத்தும் இடத்தில் இருந்து காட்சி நடைபெறும் இடத்துக்குச் செல்ல இலவச மினி பேருந்து வசதியும் மாநகரப் போக்குவரத்து கழகத்தால் செய்யப்பட்டுள்ளது.

அரசு தரப்பில், ‘உள்நாட்டு ராணுவத் தளவாடங்களின் உற்பத்தித் திறன் மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கோடு நடைபெறுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘இந்தக் காட்சி 1000 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகத்துக்கு வழிவகுக்கும்’ என்று பாதுகாப்பு உற்பத்தித் துறையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளி, 13 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon