நானக் ஷா ஃபகீர் திரைப்படம் வெளியானதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாபில் பல இடங்களில் சீக்கிய மதக் குழுக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குருநானக்கின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு நானக் ஷா ஃபகீர் திரைப்படம் உருவாகியுள்ளது. சீக்கிய சமூக அமைப்பான ஷிரோமணி குருத்வாரா பிரபந்த கமிட்டி, படத்தை வெளியிடத் தடை விதிக்கக் கோரி மனுத் தாக்கல் செய்தது.
“சீக்கிய மத குருவான குருநானக், அவரது குடும்பம் மற்றும் பஞ்ச் பியாரா ஆகியோரின் வாழ்க்கையைத் திரைப்படத்தில் சித்தரிக்க யாருக்கும் அனுமதி வழங்கவில்லை" என ஷிரோமணி குருத்வாரா பிரபந்த கமிட்டி தன் மனுவில் குறிப்பிட்டிருந்தது. ஆனால் இதை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. எதிர்ப்புகளுக்கிடையில் நேற்று (ஏப்ரல் 13) வெளியான நானக் ஷா ஃபகீர் படத்திற்கு எதிராக ரயில் மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
மாவட்ட நிர்வாகம் மற்றும் ஃபதேஹ்கர் சாஹிப் குருத்வாரா நிர்வாகம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தங்கள் கோரிக்கையைக் கொண்டுபோவதாக உத்தரவாதம் அளித்த பின்னர் எதிர்ப்பாளர்கள் தங்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டனர்.
குரு கிராந்த் சாஹிப் சாட்கர் குழுவின் தலைவர் சுக்ஜித் சிங் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, “மத்திய அரசின் சீக்கிய எதிர்ப்பு மனநிலை இந்தப் படத்திற்கு தடைவிதிக்க மறுத்ததன் மூலம் வெளியே தெரிந்துள்ளது. இது சீக்கிய மத உணர்வுகளைக் காயப்படுத்தியுள்ளது” என்று தெரிவித்தார்.
அந்தக் குழுவின் உறுப்பினரான இக்பால் சிங், “ஆர்எஸ்எஸ் திரைப்படத்தைத் தடைசெய்யக் கூடாது என்று அரசாங்கத்தை வலியுறுத்துகிறது” என்று கூறினார்.
சீக்கிய அமைப்புகள் நாடு முழுவதும் படத்தைத் தடைசெய்ய கோரிக்கை விடுத்துள்ளன.