மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 26 செப் 2020

கத்துவா வழக்கு : இரண்டு பாஜக அமைச்சர்கள் ராஜினாமா!

கத்துவா வழக்கு : இரண்டு பாஜக அமைச்சர்கள் ராஜினாமா!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கத்துவா மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக, இரண்டு பாஜக அமைச்சர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளார். இதனால், மக்கள் ஜனநாயக கட்சியுடனான பாஜகவின் கூட்டணி உறவு சீர்குலையாது என்று தெரிவித்துள்ளார் பாஜக தேசிய செயலாளர் ராம் மாதவ்.

ஜனவரி 17ஆம் தேதியன்று, ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி ஒருவர் பிணமாக மீட்டெடுக்கப்பட்டார். அவர் பாலியல் வன்முறைக்கு ஆளானது பிரேதப் பரிசோதனையில் கண்டறியப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக, அந்தப்பகுதியிலுள்ள ஆலயத்தைச் சார்ந்த சிலரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து ஏக்தா மஞ்ச் என்ற அமைப்பு கத்துவா மாவட்டத்தின் ஹிராநகரில் பேரணி நடத்தியது. இதில் அம்மாநில அமைச்சர்களான சவுத்ரி லால் சிங் மற்றும் சந்தர் பிரகாஷ் கங்கா ஆகியோர் கலந்துகொண்டனர். இதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பலத்த எதிர்ப்பை வெளிக்காட்டின.

கத்துவா சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கிடைக்க வேண்டுமென்று, நேற்று முன்தினம் (ஏப்ரல் 12) டெல்லியில் மெழுகுவர்த்திப் பேரணி நடத்தியது காங்கிரஸ் கட்சி. இதுகுறித்து, பிரதமர் மோடி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என குற்றம்சாட்டினார் காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல் காந்தி. இதனைத் தொடர்ந்து, இந்தியப் பெண்களுக்கு உரிய நீதி கிடைக்குமென்றும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படுமென்றும் தெரிவித்தார் பிரதமர் மோடி.

இந்த நிலையில், அந்த சிறுமியின் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட பேரணியில் கலந்துகொண்ட பாஜக அமைச்சர்கள் சவுத்ரி லால் சிங் மற்றும் சந்தர் பிரகாஷ் கங்கா இருவரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனை நேற்று (ஏப்ரல் 13) அம்மாநில பாஜக தலைவர் சத் சர்மாவுக்கு இருவரும் அனுப்பி வைத்தனர்.

இதன் தொடர்ச்சியாக, இரு அமைச்சர்களின் ராஜினாமாவை பாஜக தலைமை ஏற்றுக்கொண்டதாகவும், இந்த தகவல் காஷ்மீர் முதலமைச்சர் மெஹ்பூபா முப்திக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார் பாஜகவின் தேசியச் செயலாளரான ராம் மாதவ். ஜம்முவில் இன்று (ஏப்ரல் 14) நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். அமைச்சர்களை ராஜினாமா செய்யச் சொல்லி, மக்கள் ஜனநாயக கட்சி எவ்வித நிர்ப்பந்தத்தையும் அளிக்கவில்லை என தன் பேச்சில் குறிப்பிட்டார்.

“இந்த விஷயத்தில் அழுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இரண்டு அமைச்சர்களும் அந்த கூட்டத்தினரைச் சமாதானப்படுத்தவே சென்றிருந்தார்கள். அதற்கு மாறாக, அவர்கள் இருவரும் குற்றவாளிகளைக் காப்பாற்றச் சென்றதாகத் தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டது. அவர்கள் குற்றவாளிகளை ஒருபோதும் ஆதரிக்கவில்லை. இந்த விவகாரத்தில் விவேகமாகச் செயல்படாத காரணத்தினால், அவர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இதனால், ஜம்மு காஷ்மீரில் பாஜக மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி இடையேயான கூட்டணி உடையாது” என்று தெரிவித்தார் ராம் மாதவ்.

“குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென்பதில் பாஜகவுக்கு மாற்றுக்கருத்தில்லை. இந்த விஷயத்தில், இனிமேல் நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும்” என்றும் அவர் கூறினார்.

இந்த செய்தியாளர் சந்திப்புக்கு முன்பாக, ஜம்முவில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் ராம் மாதவ் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

சனி, 14 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon