மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 14 ஏப் 2018

தமிழ் புத்தாண்டு வாழ்த்தில் அரசியல்!

தமிழ் புத்தாண்டு வாழ்த்தில் அரசியல்!

மனுராஜ் சண்முகசுந்தரம்

மூன்றாவது முறையாக ஜெயலலிதா பொறுப்பேற்ற பின்பு, 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதியன்று தமிழக சட்டமன்றத்தில் தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதியன்று மீண்டும் மாற்றப்படுவதாகத் தீர்மானம் இயற்றினார். சித்திரை மாதம் தமிழ் புத்தாண்டு கொண்டாடும் வழக்கத்தை இது உயிர்ப்பித்தது. இந்தியாவெங்கும் இதே நாளில் பல சமூகத்தவரும் புத்தாண்டு கொண்டாடி வருகின்றனர்.

2008ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக்கழகம் தை முதல் நாளில் புத்தாண்டு கொண்டாடப்படும் என்று அறிவித்தது தவறு என்று, அப்போது ஜெயலலிதா கருத்து வெளியிட்டார். திமுக அரசு வெளியிட்ட பல திட்டங்களில், அவர் பதவியேற்றபிறகு மாற்றம் செய்துள்ளார். ஆனால், இந்த விவகாரம் அதிலிருந்து வேறுபட்டது.

எப்போது தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட வேண்டுமென்ற விவாதத்துக்கும், திராவிட அரசியலின் பாரம்பரியம் மற்றும் தமிழ் கலாசார மறுமலர்ச்சிக்கும் இடையே நெருங்கிய தொடர்புண்டு. தை மாதம் தமிழ் புத்தாண்டு தொடங்குவது பற்றி நற்றிணை, ஐங்குறுநூறு, தொல்காப்பியம் முதலான நூல்களில் குறிப்புகள் உள்ளதாக, 1921ஆம் ஆண்டு தெரிவித்தார் மூத்த தமிழறிஞர் மறைமலையடிகள். தமிழ் மறுமலர்ச்சி இயக்கத்தின் முன்னோடிகளில் இவரும் ஒருவர்.

சித்திரை மாதம் தமிழ் புத்தாண்டு கொண்டாடுபவர்களை, தனது பாடலொன்றில் கீழ்க்கண்டவாறு விமர்சனம் செய்துள்ளார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.

”நித்திரையில் இருக்கும் தமிழா,

சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு”

என்று அவர் குறிப்பிட்டுள்ளார். வேதங்களில் குறிப்பிட்டுள்ள தகவல்களும், சமஸ்கிருத மொழியும், தமிழர் வாழ்க்கையில் உட்புகுத்தப்பட்டுள்ளது என்றே தமிழ் மறுமலர்ச்சி மற்றும் திராவிட இயக்கங்கள் கூறின. வெளியிலிருந்து வந்த தாக்கங்களில் இருந்து தமிழைக் காப்பதில், மறைமலையடிகள் போன்ற பிராமணரல்லாத அறிஞர்கள் திராவிட அரசியலின் முன்னோடியான பெரியாரோடு ஒத்துப்போயினர்.

சித்திரையில் தொடங்கும் தமிழ் புத்தாண்டானது, வேதங்களில் கூறப்பட்டவாறு 60 ஆண்டுகால சுழற்சியை அடிப்படையாகக் கொண்டது. உதாரணமாக, தற்போதைய புத்தாண்டை ’விளம்பி’ என்று சொல்கிறார்கள். இதற்கு முந்தைய ஆண்டின் பெயர் ’ஹேவிளம்பி’. இவ்வாறு கூறப்படும் ஒவ்வொரு ஆண்டும் ’சம்வத்ஸரா’ என்ற பெயரில் இருந்து உருவானது. பகவான் கிருஷ்ணரோடு முனிவரான நாரதர் பெண் உருக்கொண்டு உறவுகொண்டதால், இருவருக்கும் 60 மகன்கள் பிறந்தனர். ஒவ்வொரு மகனும் ஒவ்வொரு ஆண்டை ஆள வேண்டும் என்ற நம்பிக்கையில், அவர்களது பெயர்கள் வழங்கப்படுவதாக வேதத்தில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் சீர்திருத்தவாதிகள் இந்த உண்மையைக் கண்டறிந்து, நாம் பின்பற்றும் காலண்டரில் மாற்றம் செய்தனர். கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு 31 ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவர் பிறந்தார் என்ற கணக்கின் அடிப்படையில், புதிய காலண்டர் முறை உருவாக்கப்பட்டது. இதனை, 1972ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பில் இருந்த திமுக அரசு அதிகாரப்பூர்வமாக அமல்படுத்தியது.

அதற்குப்பிறகு அமைந்த அதிமுக ஆட்சியின்போது, திருவள்ளுவர் ஆண்டில் எந்த மாற்றமும் செய்யாமல் பின்பற்றப்பட்டது. ஆனாலும், தமிழ் புத்தாண்டை சித்திரையில் கொண்டாடுவதா, தை மாதம் கொண்டாடுவதா என்ற விவாதம் பெரிதாகித் தொடர்ந்தது.

கடந்த 12ஆம் தேதி பாதுகாப்புத்துறை கண்காட்சியைப் பார்வையிடவந்த பிரதமர் நரேந்திர மோடி, தமிழக மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறினார். தமிழகத்தில் ஏற்பட்ட சமூக அரசியல் சீர்திருத்தம் குறித்தும், இங்குள்ள வாழ்கை முறைகள் குறித்தும் எந்த அளவுக்கு அவர் தெரிந்துவைத்துள்ளார் என்பதை இது வெளிக்காட்டியுள்ளது.

கீழடி, ஆலங்குளம், கொடுமணல் போன்ற இடங்களில் நடந்த புதிய தொல்பொருள் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கு, எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவற்றின் மூலமாக, தமிழ் மொழியின் காலம் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நோக்கில் பார்க்கும்போது, தமிழ் புத்தாண்டு தொடங்குவது தை மாதத்திலா, சித்திரை மாதத்திலா என்ற விவாதம் மீண்டும் தொடங்கியுள்ளது.

கட்டுரையாளர்: மனுராஜ் சண்முகசுந்தரம், வழக்கறிஞர் மற்றும் திமுக செய்தித்தொடர்பாளர்

நன்றி : தி பிரிண்ட்

சனி, 14 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon