மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 14 ஜூலை 2020

காவல் உதவி ஆணையர் அலுவலகத்தில் விடிய விடிய சோதனை!

காவல் உதவி ஆணையர் அலுவலகத்தில் விடிய விடிய சோதனை!

சென்னை திருமங்கலம் காவல் துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் ஆறு மணி நேரம் சோதனை செய்து 5 லட்சத்து 8 ஆயிரத்து 500 ரூபாயைக் கைப்பற்றியுள்ளனர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார்.

திருமங்கலம் காவல் துறை உதவி ஆணையராக இருப்பவர் கமீல் பாஷா. இவரது அலுவலகத்தில் நேற்று (ஏப்ரல் 13) இரவு முக்கியமான ஒரு டீலிங் நடந்துகொண்டிருப்பதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அதன் துணைக் கண்காணிப்பாளர் நடராஜன் தலைமையில் ஒரு டீம் நேற்றிரவு பத்து மணியளவில் உதவி ஆணையர் அலுவலகத்தில் நுழைந்தனர். இன்று அதிகாலை 4.00 மணி வரையில், அதாவது ஆறு மணி நேரம் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர்.

விடிய விடிய நடந்த சோதனையில் ஏசி. கமீல் பாஷாவிடமிருந்து இரண்டரை லட்சம் ரூபாயும், அவரைப் பார்க்க வந்த செல்வம் என்பவரிடமிருந்து 2,58,500 ரூபாயும் கைப்பற்றியவர்கள் முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றிக்கொண்டு சென்றிருக்கிறார்கள். செல்வம் கட்டுமானத் துறையைச் சேர்ந்தவர் என்று தெரிகிறது. இது தொடர்பாக எஃப்.ஐ.ஆர் போட்டதாக காவல் துறை தரப்பில் தகவல் கசிகிறது. இது குறித்து இருவரிடமும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதற்கிடையில், ஸ்ரீபெரும்புதூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ஒரு லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. முறைகேடு புகாரில் சிக்கிய விழுப்புரம் பத்திரப் பதிவு அலுவலகத்திலும், நேற்று நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், 92 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர்.

நம்மிடம் பேசிய காவல் துறையினர் சிலர், ”கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தமிழகத்தில் அதிகாரிகள் ஆட்சிதான் நடைபெற்றுவருகிறது. குறிப்பாகக் காவல் துறையில் அரசியல்வாதிகள் தலையீடுகள் அதிகம் இல்லை. அதனால் காவல் துறை அதிகாரிகளின் ஆட்டம் அதிகமாகிவிட்டது.ஆட்சியாளர்கள் பெயரைச் சொல்லி அதிகாரிகள்தான் பல டீல்களை முடித்துவருகிறார்கள்’’ என்றனர்.

சனி, 14 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon