மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 14 ஜூலை 2020

புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு!

புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு!

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இன்று (ஏப்ரல் 14) தமிழ்ப் புத்தாண்டினை உற்சாகமாகக் கொண்டாடிவருகின்றனர்.

இந்தப் புத்தாண்டு தினம் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்களால் கொண்டாடப்பட்டுவருகிறது. அதேபோல், கேரளாவில் விஷு என்றும், அசாமில் பிஹு என்றும், பஞ்சாபில் வைஷாகி என்றும், மேற்கு வங்காளத்தில் பொஹெலா பொய்ஷாக் என்றும் புத்தாண்டு கொண்டாடப்பட்டுவருகிறது.

ஒவ்வொரு தமிழ்ப் புத்தாண்டுக்கும் ஒரு பெயர் உண்டு. நேற்றோடு முடிந்த ஆண்டுக்கு ஹேவிளம்பி என்று பெயர். இந்த ஆண்டின் பெயர் விளம்பி.

சித்திரை முதல் நாளான இன்று மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், வெற்றிலை, பாக்கு, நகைகள், நெல் முதலான மங்கலப் பொருட்கள் வைத்த தட்டைப் பூஜை அறையில் வைத்து, அதைப் புத்தாண்டு அதிகாலையில் காண்பது புனிதமாகக் கருதப்படுகின்றது. மக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து, புத்தாடை உடுத்தி, வீட்டில் கனி காணுதலோடு புத்தாண்டை தொடங்குவர்.

தமிழகத்திலும், கேரளாவை ஒட்டியுள்ள பகுதிகளிலும் இந்தக் கனி காணுதல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகிறது. கன்னியாகுமரி, நாகர்கோவில், திருப்பூர், கோவையில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டுக் கோயில்களில் கனி காணுதல் நடைபெற்றது. அதிகாலை முதலே கோயில்களில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சென்னையில் வடபழனி முருகன் கோயில், திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோயில், பெசன்ட்நகர், அஷ்டலட்சுமி கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவேற்காடு கருமாரியம்மன் கோயில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில், மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வர் கோயில், திருநீர்மலை ரங்கநாதர் கோயில், குன்றத்துார் முருகன் கோயில், மாங்காடு காமாட்சியம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கல்ந்துகொண்டனர்.

சனி, 14 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon