மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 25 செப் 2020

வேலை: இந்தியாவுக்கு சிங்கப்பூர் அறிவுரை!

வேலை: இந்தியாவுக்கு சிங்கப்பூர் அறிவுரை!

வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் இந்தியா மிகவும் பின்தங்கியிருப்பதாகவும், ஆண்டுக்கு 1.2 கோடி வரையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்க இந்தியா பாடுபட வேண்டும் எனவும் சிங்கப்பூர் ஆலோசனை வழங்கியுள்ளது.

சிங்கப்பூரில் ஏப்ரல் 13ஆம் தேதி நடந்த ஹெச்.டி.மிண்ட் ஆசிய தலைமை உச்சி மாநாட்டில் சிங்கப்பூர் துணைப் பிரதமரும் இந்தியாவைச் சேர்ந்தவருமான தர்மன் சண்முகரத்தினம் பேசுகையில், ” இந்தியாவானது ஆண்டு ஒன்றுக்கு 1 கோடி முதல் 1.2 கோடி வரையிலான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். ஆனால் இதில் இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது. அதை அடைவதற்கு சிறந்த மூலோபாயம் தேவை. இந்தியாவில் உள்கட்டுமானப் பணிகள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. சாலைகள், ரயில் போக்குவரத்து மற்றும் விமான நிலையங்களில் உள்கட்டுமானம் மேம்பட்டு வருகிறது. எனினும் அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதிலும், எளிதாகத் தொழில் தொடங்கும் வாய்ப்புகளை உருவாக்குவதிலும் இந்தியா மந்தமாகவே இருக்கிறது.

வேகமான பொருளாதார வளர்ச்சிக்கு மற்ற நாடுகளுடனான போட்டி மற்றும் கற்றுக்கொள்ளுதல் ஆகிய காரணிகளும் பிற நாடுகளுடனான எல்லை தாண்டிய வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளும் மிக முக்கியமானவை. இந்திய அரசின் ‘மேக் இன் இந்தியா’ திட்டமானது இந்தியாவுக்கும் உலக நாடுகளுக்குமானதாக இருக்க வேண்டும். சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான வர்த்தகப் போரை வைத்து நாம் உள்நாட்டு வளர்ச்சியை மட்டுமே முக்கியம் எனக் கருதக்கூடாது. ஆசியாவில் வர்த்தக வெளிப்படைத்தன்மை தொடர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

சனி, 14 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon