மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 14 ஏப் 2018

ஸ்பெஷல்: மனதை லேசாக்கும் ஊஞ்சல்கள்!

ஸ்பெஷல்: மனதை லேசாக்கும் ஊஞ்சல்கள்!

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஊஞ்சல் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. வண்ணமயமான சோபாக்கள் வகை வகையாக வந்துவிட்டாலும், அவை அனைத்தும் ஓர் ஊஞ்சலுக்கு ஈடாகாது. வீட்டின் வரவேற்பு அறையில் ஓர் ஊஞ்சல் அமைப்பு இருந்துவிட்டால் போதும், அந்த வீட்டின் ஆடம்பரமான தோரணையை எடுத்துச் சொல்லும். மனதை உடனடியாக லேசாக்கும் எளிமையான வழிகளில் ஒன்றாக ஊஞ்சல் இருப்பதே அதனுடைய தனிச் சிறப்பு. தென்னிந்தியாவைப் பொறுத்தவரை, வீட்டுக்குள் ஊஞ்சல் அமைப்பது பாரம்பரியமான வழக்கம். அந்த ஊஞ்சல் அமைப்பு பாரம்பரிய முறைப்படி இருக்கும். ஆனால் இன்று, நவீன வீடுகளுக்கேற்ற நவீன ஊஞ்சல்கள் வரத் தொடங்கியிருக்கின்றன.

குழந்தைகள் விளையாடுவதற்கும், பெரியவர்கள் இளைப்பாறுவதற்கும் உகந்தது ஊஞ்சல். கொஞ்ச நேரம் ஊஞ்சலில் அமர்ந்து ஆடினால் போதும், மனதில் இருக்கும் அழுத்தமெல்லாம் மாயமாய் மறைந்துபோவதை நீங்களே உணர்வீர்கள். பால்கனிக்கு அடுத்து, காலையில் எழுந்தவுடன் உற்சாகமாகக் காப்பி குடிப்பதற்கும், மாலையில் பிடித்த புத்தகம் படிப்பதற்கும், ஊஞ்சலைவிடச் சிறந்த இடம் இருக்க முடியாது.

துணி ஊஞ்சல்

பொதுவாகத் தோட்டத்திலும் பால்கனியிலும் அமைக்கப்படும் இந்தத் தூங்கும் தொட்டிலை, இப்போது வீட்டுக்குள்ளும் அமைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இதை வரவேற்பறை, படுக்கையறை, பால்கனி என எங்கு வேண்டுமானாலும் அமைக்கலாம். ஆனால் இவற்றைப் பொருத்துவதற்கு ஏற்றமாதிரி வீட்டின் உத்தரமும் தூண்களும் இருக்க வேண்டும். மதிய நேரங்களில் குட்டித் தூக்கம் போடுபவர்களுக்கு, இந்தத் தூங்கும் தொட்டில் ஏற்றதாக இருக்கும். வீட்டின் அழகைப் பிரதிபலிக்கும் வகையில் விதவிதமாக இவற்றை அமைத்துக்கொள்ளலாம். ஏராளமான வண்ணங்களில் இவை கிடைக்கின்றன. இதைத் தேவைக்கேற்ப அகலமாகவும் நீளமாகவும் அமைக்கலாம் என்பதே இதன் சிறப்பான விஷயம்.

மர ஊஞ்சல்!

பாரம்பரியமான வீட்டு அலங்காரத்தை விரும்புபவர்களுக்கு ஏற்றது மர ஊஞ்சல்தான். இந்த மர ஊஞ்சலை வீட்டின் வரவேற்பறையிலும் பால்கனியிலும் அமைக்கலாம். ஆனால், இந்த ஊஞ்சலை அமைப்பதற்குச் சற்றுப் பெரிய இடம் தேவைப்படும். வரவேற்பறையில் ஊஞ்சலைப் பொருத்தினால், ஜன்னலுக்கு அருகில் இருக்குமாறு பார்த்துக்கொண்டால் காற்றோட்டம் கிடைக்கும். மர ஊஞ்சல்களில், எல்லோராலும் நினைத்தவுடன் வாங்கக்கூடியது, மூங்கில் ஊஞ்சல்தான். இது பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு, குறைந்த விலையிலும் கிடைக்கிறது. மூங்கில் ஊஞ்சல் பயன்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் எளிமையானது.

குமிழி ஊஞ்சல்!

பார்ப்பதற்குக் குமிழி போன்ற தோற்றத்துடன் இருக்கும் இந்த ஊஞ்சல் நவீனத்தை விரும்புபவர்களுக்குப் பிடிக்கும். வரவேற்பறை, படிக்கும் அறை, படுக்கையறை, பால்கனி என எங்கே வேண்டுமானாலும் இதை வைத்துக்கொள்ளலாம். நாற்காலிகளும் சோபாக்களும் சலித்துவிட்டால், இளைப்பாறுவதற்கு ஏற்றதாக இந்தக் குமிழி ஊஞ்சல் இருக்கும்.

படுக்கை ஊஞ்சல்!

இந்த ஊஞ்சலுக்கு அதிக இடவசதி தேவைப்படும் என்பதால், பால்கனியே இதற்குச் சரியான தேர்வாக இருக்கும். வேண்டுமானால் கார்டனிங் ஏரியாக்களில் வைக்கலாம். இந்தப் படுக்கை ஊஞ்சலை பால்கனியில் வைத்தால் போர்வை, தலையணையுடன், இயற்கையான காற்றோட்டத்துடன் இரவு நேரங்களில்கூட தூங்கலாம். இந்த வகை ஊஞ்சலில், படுக்கை அமைப்புடன் இருக்கும் பிரத்யேகமான ஊஞ்சலும் இருக்கிறது.

ஆனால், இதை வைப்பதற்குக் கூடுதல் இடவசதி தேவைப்படும்.

உலோக ஊஞ்சல்!

ஊஞ்சலில் நன்றாக ஆட வேண்டும் என்று விரும்பும் பெரியவர்களுக்கு ஏற்றது, உலோக ஊஞ்சல்தான். இதை வீட்டில் அமைப்பதும் எளிமையானதுதான். குழந்தைகள் இருக்கும் வீடுகளுக்கு உலோக ஊஞ்சல் சரியான தேர்வு. இளைப்பாறல் மட்டுமல்லாமல், குதூகலத்துடன் ஊஞ்சலாடுவதற்கு உலோக ஊஞ்சல் பயன்படும். இதில் பல வகைகள் வந்துவிட்டன. ஸ்டாண்டுடன் கூடிய உலோக ஊஞ்சல்களும் கிடைக்கின்றன. இதை எங்கு வேண்டுமானாலும் நகர்த்தி வைத்துக்கொள்ள முடியும். பசுமையான கார்டனிங் போன்ற இடங்களில் இந்த ஊஞ்சல்கள் பொருத்தமானவை.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

சனி 14 ஏப் 2018