மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 13 ஜூலை 2020

ஜோதிகாவின் ஆச்சரியக் கூட்டணி!

ஜோதிகாவின் ஆச்சரியக் கூட்டணி!

இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் புதிய படத்தில் நடிக்க நடிகர் விதார்த் ஒப்பந்தமாகியுள்ளார்.

‘மகளிர் மட்டும்’ படத்திற்குப் பிறகு ‘நாச்சியார்’ படத்தில் நடித்த ஜோதிகா, தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் நடித்துவருகிறார். இதையடுத்து, இந்தியில் வித்யா பாலன் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற துமாரி சுலு படத்தின் ரீமேக்கிலும் நடிக்கவுள்ளார். இதைத் தமிழில் இயக்குநர் ராதாமோகன் ரீமேக் செய்ய, வித்யாபாலன் நடித்த ஆர்.ஜே கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிக்கிறார். ஒரிஜினல் வெர்ஷனில் நேஹா தூபியா நடித்த கேரக்டரில் லக்ஷ்மி மஞ்சு நடிக்கிறார்.

தற்போது இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரமொன்றில் நடிக்க நடிகர் விதார்த் ஒப்பந்தமாகியுள்ளார். இதில் விதார்த் ஜோதிகாவின் கணவராக நடிக்கிறார். விதார்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான குரங்கு பொம்மை, ஒரு கிடாயின் கருணை மனு உள்ளிட்ட படங்கள் விமர்சனரீதியாக வரவேற்பைப் பெற்றாலும் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. ராதாமோகனின் படங்களில் ஒவ்வொரு கதாபாத்திரமும் உயிரோட்டமுள்ளதாக ரசிகர்களைக் கவரும்படியாக இருக்கும் என்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தப் படத்தை தனஞ்செயன் தயாரிக்கிறார். தற்போது நடைபெற்றுவரும் தயாரிப்பாளர்கள் சங்க வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்த பிறகு இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சனி, 14 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon