மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் உதயகுமார் முன்பு போலீசார் மீது குற்றம் சாட்டி ஐந்து பெண்கள் தீக்குளிக்க முயற்சி செய்தனர்.
மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் அரசு நிகழ்ச்சியை முடித்து விட்டு வந்த தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் முன்பு ஐந்து பெண்கள் தங்கள் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் அதிகாரிகள், அவர்களை தடுத்து நிறுத்தினர். இவர்கள் மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த ஆறுமுகத்தாய், காந்திமதி, லட்சுமி, ஈஸ்வரி, ஆறுலட்சுமி ஆகிய ஐந்து பேர் ஆவர்.
இதுகுறித்து அந்த பெண்கள் கூறுகையில், எங்களது உறவினர் கவாத் திருப்பதி,குண்டுமணி, மணி,பிரேம், மற்றும் பாண்டி ஆகியோர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. அவர்கள் தலைமறைவாக உள்ளதால்,போலீசார் தொடர்ந்து அவர்களை தேடி வந்தனர்.
கேளராவில் கூலி வேலை செய்து கொண்டிருந்த ஐந்து பேரையும் சமீபத்தில் போலீசார் கண்டுபிடித்தனர். ஐந்து பேரில், 2 பேரை அடித்து துன்புறுத்தியதில் பலத்த காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மீதமுள்ள மூன்று பேரை எங்க வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்ற தகவலையும் அளிக்க போலீசார் மறுக்கின்றனர். அவர்களை என்கவுன்டர் செய்து விடுவதாக போலீசார் மிரட்டினர். எப்படியாவது அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, இந்த சம்பவத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவதாக அமைச்சர் உறுதியளித்தார்.