மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 13 ஜூலை 2020

காமன்வெல்த்: ‘நம்பிக்கை நாயகி’ மேரி கோம்!

காமன்வெல்த்: ‘நம்பிக்கை நாயகி’ மேரி கோம்!

‘நடிச்சா ஹீரோ கேரக்டர்தான். சைடு ரோல் எல்லாம் பண்றதா இல்லை’ என்பது போல, அடித்தால் தங்கப் பதக்கம்தான். இரண்டாம் மூன்றாம் இடமெல்லாம் வருவதாக இல்லை’ என்று கங்கணம் கட்டிக்கொண்டு இந்திய வீரர்கள் காமன்வெல்த் போட்டிகளில் விளையாடிவருகின்றனர். ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியின் பத்தாவது நாளான இன்று மட்டும் 4 தங்கம் மற்றும் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றிருக்கிறது இந்தியா.

முதலாவது தங்கப் பதக்கத்தை ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் கலந்துகொண்ட நீரஜ் சோப்ரா 86.47 மீட்டருக்கு ஈட்டியை எறிந்து முதலிடம் பெற்றிருக்கிறார். இவருக்கு அடுத்ததாக, ஆஸ்திரேலியாவின் ஹமிஷ் 82.59 மீட்டர் எறிந்து இரண்டாவது இடம்பிடித்தார். இந்தியாவின் மற்றொரு ஈட்டி எறியும் வீரரான விபின் கஷானா 77.87 மீட்டர் எறிந்து ஐந்தாவது இடம்பிடித்தார்.

ஆண்களுக்கான 50 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் (ரைஃபில்) போட்டியில் இந்தியாவின் சஞ்சீவ் ராஜ்புத் 454.5 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் வென்றார். இவர் பெற்ற புள்ளி, மூன்று நிலைகளில் 50 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில் தற்போதைய சாதனையாக இடம்பெற்றிருக்கிறது. இந்தியாவின் மற்றொரு வீரர் சைன் சிங் 419.1 புள்ளிகளுடன் ஐந்தாவது இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது.

ஆண்களுக்கான 60 கிலோ குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் மணிஷ் கௌஷிக், ஆஸ்திரேலியாவின் ஹேரி கார்சைட் என்பவரை எதிர்த்துப் போட்டியிட்டதில் 141-145 என்ற இறுதி முடிவைப் பெற்று நான்கு புள்ளிகளில் தங்கப் பதக்கத்தைத் தவறவிட்டு, வெள்ளிப் பதக்கத்தை தட்டிப் பிடித்தார். அதேபோல, ஆண்களுக்கான 46-49 கிலோ குத்துச் சண்டையில் இங்கிலாந்தின் கயல் யஃபாய் என்பவரை எதிர்கொண்ட இந்திய வீரர் அமித்கூட 4 புள்ளிகளில் தங்கப் பதக்கத்தைத் தவறவிட்டார். ஆனால், ஆண்களுக்கான 52 கிலோ எடைப் பிரிவில் வட அயர்லாந்தின் பிரெண்டன் இர்வினுடன் மோதிய இந்திய வீரர் கௌரவ் சொலாங்கி ஐந்து புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

இந்திய ரசிகர்களுக்கு அதிகம் தெரிந்தவரும், இந்திய பாக்சிங் விளையாட்டுத் துறையில் பல வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வீராங்கனையாக வலம் வருபவருமான மேரி கோம், வட அயர்லாந்தின் கிறிஸ்டியனா ஓ’ஹரா என்பவரை பெண்களுக்கான 45 முதல் 48 கிலோ எடைப் பிரிவுக்கான போட்டியில் எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய மேரி கோம் 150 புள்ளிகளில் ஒரு புள்ளியை மட்டுமே இழந்தார். கிறிஸ்டியனா, மேரி கோமின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் 14 புள்ளிகள் பின் தங்கிய நிலையில் தங்கப் பதக்கத்தை மேரி கோமுக்குக் கொடுத்து, வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுக்கொண்டார்.

இன்று (14.04.18) மதியம் 12 மணி நிலவரப்படி, இந்தியா 21 தங்கம், 13 வெள்ளி, 14 வெண்கலப் பதக்கங்களை வென்று மூன்றாவது இடத்தில் 48 பதக்கங்களுடன் நீடிக்கிறது.

சனி, 14 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon