மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 6 ஜூலை 2020

ஜாமீன் வழங்க லஞ்சம்: நீதிபதி கைது!

ஜாமீன் வழங்க லஞ்சம்: நீதிபதி கைது!

தெலங்கானாவில், ஜாமீன் வழங்குவதற்காக ரூ .7.5 லட்சம் லஞ்சம் வாங்கியதாகக் கூறி மெட்ரோபாலிட்டன் செஷன்ஸ் கோர்ட் நீதிபதி உட்பட இரு வழக்கறிஞர்களை ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஸ்ரீரங்காராவ் என்பவர், செஷன்ஸ் கோர்ட் நீதிபதி ராதா கிருஷ்ணமூர்த்தி ஒரு குற்றவாளிக்கு ஜாமீன் வழங்க 2 வழக்கறிஞர்கள் மூலம் ரூ. 7.5 லட்சம் லஞ்சம் வாங்கியதாக வழக்கு தொடர்ந்தார்.

எம்.டெக். மாணவர் தத்து என்பவருக்கு ஜாமீன் வழங்க வழக்கறிஞர்கள் கே.சீனிவாசராவ், சதீஷ்குமார் ஆகியோர் உதவியுடன் லஞ்சம் பெற்று ஜாமீன் வழங்கியதாக ஸ்ரீரங்காராவ் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இது பற்றி ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணையில் தத்துவின் தாய் தனது நகைகளை விற்று லஞ்சம் கொடுத்ததும், அதனை இரு கட்டங்களாக நீதிபதி பெற்றுக்கொண்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. வழக்கறிஞர்கள் கே.சீனிவாசராவும், சதீஷ்குமாரும் லஞ்சப் பணத்தை தத்துவின் தாயிடம் வாங்கி நீதிபதியிடம் கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து நீதிமன்ற அனுமதியுடன் ஆல்வால் பகுதியில் உள்ள நீதிபதியின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது லஞ்சம் பெற்றதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன.

இதையடுத்து லஞ்சம் பெற்ற நீதிபதி உட்பட இரு வழக்கறிஞர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை ஏப்ரல் 26ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்போது மூவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நீதிக்காக வாதாடுபவர்களே லஞ்சம் பெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சனி, 14 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon