மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 13 ஜூலை 2020

அம்பேத்கர் பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை!

அம்பேத்கர் பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை!

டாக்டர் அம்பேத்கரின் 128ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு தலைவர்களும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரான சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் 128ஆவது பிறந்தநாள் விழா இன்று (ஏப்ரல் 14) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து பல்வேறு தலைவர்களும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அனுவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அதிமுக சார்பில் சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் அம்பேத்கர் சிலைக்கு கீழ் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப் படத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சென்னை கோயம்பேட்டிலுள்ள அம்பேத்கர் சிலைக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன், இந்தியக் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "சமூகநீதி, சமத்துவம், சமநீதியை நிலைநிறுத்திய சட்டமேதை அண்ணல் டாக்டர்.அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளில், மதவெறி - இனவெறி - மொழிவெறி அரசியல் மூலம் தமிழகத்திற்கு எதிராக அனைத்துத் துறைகளையும் காவி மயமாக்க முயலும் பா.ஜ.க அரசிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற சபதமேற்போம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் வாழ்வுரிமைக் கட்சி கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதேபோன்று சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மரியாதை செலுத்தினார். மேலும் அவரது ட்விட்டர் பக்கத்தில், "சட்ட மேதை பாபா சாகிப் டாக்டர். அம்பேத்கர் அவர்களின் 127 வது பிறந்தநாளில் தமிழக பாஜக சார்பில் எங்களது வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறோம்" என்று குறிப்பிட்டார்.

சனி, 14 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon