மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 13 ஜூலை 2020

ஜிஎஸ்டி பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு!

ஜிஎஸ்டி பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு!

ஜிஎஸ்டி நடைமுறையில் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான பணிகள் நடந்துகொண்டிருப்பதாக வர்த்தகத் துறை செயலாளர் ரீட்டா தேயோத்தியா கூறியுள்ளார்.

ஹைதராபாத்தில் ஏப்ரல் 13ஆம் தேதியன்று நடந்த இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு கூட்டத்திற்குப் பிறகு பத்திரிகையாளர் சந்திப்பில் இதுகுறித்து அவர் கூறுகையில், "ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் நிலவும் நடைமுறைச் சிக்கல்களுக்குத் தீர்வுகாணும் பணிகள் நடந்துவருகின்றன. குறிப்பாக ஏற்றுமதியாளர்கள் சந்திக்கும் சிக்கல்களுக்குத் தீர்வு காணப்படும். ரிட்டன் தாக்கல் செய்தவர்களுக்கான தொகைகள் விரைவாக வரும் மாதங்களில் திரும்பிச் செலுத்தப்படும். இ-காமர்ஸ் துறைக்கான ஒழுங்குமுறைக் கொள்கைகள் வகுப்பது பற்றியும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. அதற்கான கட்டமைப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். அந்தத் துறையில் நிலவும் சிக்கல்களுக்கும் உரிய தீர்வு காணப்படும்” என்றார்.

ஏற்றுமதியாளர்களுக்கு ரீபண்ட் தொகை வழங்குவது ஜிஎஸ்டி அமலான பிறகு தாமதமாகி வருவதாகக் குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் சார்பில் சென்ற மாத இறுதியில் ஹைதராபாத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தென்னிந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பின் தலைவர் ஏ.சக்திவேல், “தென்னிந்திய ஏற்றுமதியாளர்களின் ரீபண்ட் தொகை சுமார் ரூ.10,000 கோடி பாக்கி இருந்தது. இதில் இதுவரையில் ரூ.4,000 கோடி வழங்கப்பட்டுவிட்டது. மீதத் தொகை வழங்கப்படுவதற்கான பணி நடைபெற்று வருகிறது. இந்த நிதியாண்டின் முடிவுக்குள் இந்தப் பாக்கி ரீபண்ட் தொகை வழங்கப்பட்டுவிடும். சென்ற ஆண்டில் சர்வதேசக் காரணிகளால் ஏற்றுமதியில் பின்னடைவு இருந்தது. ஆனால் இந்த ஆண்டில் 6 முதல் 8 சதவிகித வளர்ச்சி கிட்டும்” என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

சனி, 14 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon